![](pmdr0.gif)
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத் தமிழ்
புளியங்குடி முத்துவீரக் கவிராயர் இயற்றியது
cankarankOyil kOmatiyammai piLLaittamiz
by puLiyangkuTi muttuvIrak kavirAyar
In tamil script, unicode/utf-8 format
-
Acknowledgements:
Our Sincere thanks go to Mr. Kambapaadasekaran @ E. Sankaran of Tirunelveli for providing
a printed copy of this work along with permission to publish the e-version as part of Project Madurai collections.
We thank Mrs. Meenakshi Balaganesh, Bangalore for her assistance in the preparation of the soft copy of this work.
Preparation of HTML and PDF versions: Dr. K. Kalyanasundaram, Lausanne, Switzerland.
© Project Madurai, 1998-2020.
to preparation
of electronic texts of tamil literary works and to distribute them free on the Internet.
are
https://www.projectmadurai.org/
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத் தமிழ்
புளியங்குடி முத்துவீரக் கவிராயர் இயற்றியது
Source:
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத் தமிழ்
பதிப்பாசிரியன் : கம்பபாதசேகரன், ஆதீன சமயப்பரப்புனர், நெல்லை, கடையம்,
அருள்மிகு. வில்வவனநாத சுவாமி திருவாசக முற்றோதுதல் குழு மற்றும்
கடையம் ஸ்ரீ நித்யகல்யாணி சேவா சமாஜத்தினரின் பேருதவியுடன் நவராத்திரி
விழாவில் கடையத்தில் வெளியிடப்பட்ட கலைமகள் திருநாள் மலர்
பிள்ளைத்தமிழ் களஞ்சியம் 2
வெளியிட்டோர் : கம்பன் இலக்கியப் பண்ணை,
பிட்டாபுரத்தம்மன் கோயில்தெரு, திருநெல்வேலி நகர் - 627 006.
வள்ளுவம் 2046ம் ௵ துலை 4s முரசு 21.10.2015
க.ஆ. 1130 - விளைநிலம் : 173
------
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ்
புளியங்குடி முத்துவீரக் கவிராயர் இயற்றியது
இராசராசசோழர், நாதமுனிகள், உ.வே.சாமிநாத ஐயர், மு.ரா. அருணாசலக் கவிராயர், புட்பரத செட்டியார். திருமுறையை, திவ்விய பிரபந்தத்தை, காப்பியங்களை, சிற்றிலக்கியங்களை, செப்பேட்டிலும், பட்டோலையிலும், அச்சிட்டும் பைந்தமிழ் செல்வங்களை உலகிற்கு அளித்த சான்றோர் இவர்கள் திருவடிகளுக்கு துறைசை ஆதீன 23வது சந்நிதானம் சிவப்பிரகாச தேசிக மூர்த்திகள் அவர்கள் ஆணையிட்டபடி இந்நூலை பதிப்பித்து படிமக்கலமாக படைக்கின்றேன்.
பிள்ளைத்தமிழ்க் களஞ்சியம் 2
வெளியிட்டோர் :
கம்பன் இலக்கியப்பண்ணை,
பிட்டாபுரத்தம்மன் கோவில்தெரு, திருநெல்வேலி நகர்.
----------
ஓம்
தொகுத்தோன் நுவல்வு
-
எவை எல்லாம் செய்தோம் எவை எல்லாம் செய்வோம்
அவை எல்லாம் எம் செயல்கள் அல்ல - சிவைபாலா
அத்துணையும் நின்செயலே அப்பலனும் நிற்கேதான்
முத்தி அருள் வேழ முகா
இப்பணியில் பிள்ளைத்தமிழ் களஞ்சியம் எனும் தொகுப்பில் நெல்லை, தூத்துக்குடி குமரி மாவட்டத்தில் உள்ள இறைவி பிள்ளைத்தமிழ் நூல்களை இரண்டு இரண்டு நூல்களை இணைத்து பதிப்பித்து வருகிறேன். முதல் பகுதியில் காந்திமதியம்மை, மரகதவல்லியம்மை பிள்ளைத்தமிழ் நூல்களை பதிப்பித்துள்ளேன். இரண்டாம் பகுதியில் சங்கரன்கோவில் கோமதியம்மை, கடையம் கலியாணியம்மை பிள்ளைத்தமிழ்களை கலைமகள் திருநாள் மலராக இப்பொழுது வெளியிடுகிறேன்.
கோமதியம்மை பிள்ளைத்தமிழை இயற்றியவர் ஊற்றுமலை சமின் அவைப்புலவர் முத்துவீரக் கவிராயர் ஆவார். இவரது வரலாறு எதுவும் கிடைக்கவில்லை .
இப்பதிப்பிற்கு ஆசி வழங்கி அருளிய திருவாவடுதுறை ஆதீன 24-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிகர் பரமாச்சாரிய சுவாமிகள் பொன்னடி-களுக்கு அடியேன் நன்றி தெரிவித்துப் பணிகிறேன்.
இப்பதிப்பிற்குப் பேருதவி புரிந்த கடையம் வில்வவனநாதர் திருவாசக முற்றோதல் குழுவினர், கடையம் ஸ்ரீ நித்யகல்யாணி சேவா சமாஜம் அவர்களுக்கும் துணைநின்ற அடியார்களுக்கும், இந்நூலினைத் திருத்தியும், அணிந்துரை நல்கியும் உதவிய நண்பர் திரு. மு.சு. சங்கர் அவர்களுக்கும் மற்றும் கடையம், திரு. கே.எஸ். கல்யாணி சிவகாமிநாதன், திரு. ஆ. கல்யாண சுந்தரம் ஆகியோருக்கும், அறநிதியும், விளம்பரங்களும் தந்துதவிய அன்பர்களுக்கும் அடியேனின் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்நூலினை சிறந்த முறையில் அச்சிட்டு உதவிய வெங்கடேஷ் ஆப்செட் திரு. ச. சங்கர், திரு. தெ. முத்துமணி, திரு. மா. வள்ளி ஆகியோருக்கும் பலவகையிலும் பதிப்பிற்கு உதவிய அனைவருக்கும் நன்றி.
இவண் கம்பன் அகம் 627 006; ஆதீன சமயப்பரப்புனர் பிழைத்தது பொறுத்தல் பெரியவர் கடனே - கம்பன்
சிவமயம்
திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம்
இருபத்து நான்காவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாசாரிய சுவாமிகள், திருவாவடுதுறை (அஞ்சல்) - 609 803. நாகை மாவட்டம்.
நாள் : 30.09.2015
-----------
அருள் வாழ்த்துரை
-
நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சின் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள்வாழ்க.
திரிபுரை சுந்தரி அந்தரி சிந்துரப்
பரிபுரை நாரணி யாம்பல வண்ணத்தி
இருள்புரை ஈசி மனோன்மணி என்ன
வருபல வாய்நிற்கும் மாமாது தானே. - திருமந்திரம்
நம் ஆதீன சமயப்பரப்புநர் கம்பபாத சேகரன் சைவத்திரு. இ. சங்கரன் அவர்கள் வருகின்ற கலைமகள் திருநாள் விழா மலராக கடையம் அடியார்கள் துணையுடன் சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ், கடையம் கலியாணி அம்மை பிள்ளைத்தமிழ் ஆகிய இரு நூல்களையும் கம்பன் இலக்கியப் பண்ணை வெளியீடாக வெளியிட உள்ளமை அறிந்து மகிழ்ச்சி அடைகின்றோம்.
சிறந்த சிற்றிலக்கியங்களைப் பதிப்பித்து வெளியிடும் அரும்பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ள திருவாளர் கம்பபாதசேகரன் அவர்களின் பணிகள் பாராட்டுக்குரியன. அவர்தம் சீரியபணிகள் மேன்மேலும் தழைக்க வேண்டுமென நமது ஆன்மார்த்த மூர்த்திகளாகிய ஸ்ரீ ஞானமாநடராஜப் பெருமான் திருவடி மலர்களைச். சிந்தித்து வாழ்த்துகின்றோம்.
இணைப்பு : திருநீற்றுத்திருக்காப்பு
பெறுநர் : சிவத்திருத்தொண்டர் கம்பபாத சேகரன் அவர்கள், நெல்லை
------------------
அணிந்துரை : கவிஞர் மு.சு. சங்கர், நெல்லை
அத்தகு சான்றோர்களில் நம்மிடையே நடமாடும் உ.வே. சாமிநாதராக விளங்கும் திருவாளர் கம்பபாதசேகரன் என்னும் இ. சங்கரன் அவர்கள் சமயத்திற்கும், இலக்கியத்திற்கும் ஆற்றிவரும் தொண்டு அளப்பரியது. ஏறத்தாழ நாற்பதாண்டுகளுக்கு முன் "கம்பன் இலக்கியப் பண்ணை” என்னும் அமைப்பனை நிறுவி, இன்று வரை சலிப்பின்றி உழைத்து வருபவராம்.
அன்று உலா நூற்கோவை, தூது நூற்கோவை எனப் பதிப்பிக்கப்பட்டது போல இன்று இவர்கள் பிள்ளைத்தமிழ்க் களஞ்சியம் என்ற பெயரில் பல்வேறு தலங்களில் பல்வேறு திருப்பெயர்களோடு எழுந்து அருளி அருள்பாலித்து வரும் அன்னை உமையவள் மீது, அத்தத் தலத்தில் பாடப்பெற்ற பிள்ளைத்தமிழ் நூல்களை இரண்டு நூல்கள் கொண்டதாகப் பதிப்பித்து வெளியிடத் திட்டமிட்டு, முதல் நூலாகத் திருநெல்வேலி, காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ், வீரவனல்லூர் மரகதாம்பிகை பிள்ளைத்தமிழ் இரண்டையும் பதிப்பித்து 10-08-2015 திருமந்திரநகரமெனும் தூத்துக்குடி திரு பாகம்பிரியாள் மாதர்கழக ஆண்டுவிழாவில் வெளியிட்டார்கள்.
அவ்வரிசையில் இரண்டாவதாக சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ் - கடையம் கலியாணியம்மை பிள்ளைத்தமிழ் அடங்கிய நூலை இப்பொழுது வெளியிடுகிறார்கள். மூன்றாவதாகக் கும்பகோணம் மங்களாம்பிகை பிள்ளைத்தமிழ் - பாபநாசம் உலகம்மை பிள்ளைத்தமிழ் கொண்ட நூலை வெளியிடத் திட்ட-மிட்டுள்ளார்கள்.
இவ்வாறு அரிய பணியில் ஈடுபட்டுள்ள தொகுப்பாசிரியர் அவர்களுக்கு, சைவநன்மக்கள், சமயச் சான்றோர்கள், தமிழார்வலர்கள் எனப் பல்திறத்தோரும் ஆதரவளிப்பதுடன் நூல்களைத் தேடிக் கொடுத்தும் உதவிட வேண்டுகின்றேன். அச்சிலில்லாத பல அரிய நூல்களை அவர்கள் தேடி வருவதறிவேன். அவ்வாறு தேடிக் கொண்டிருக்கும் நூல்களின் பட்டியலை இத்தகைய வெளியீடுகளில் பிரசுரித்தால் கண்ணுறுவோர் கவனத்தை ஈர்த்து அவை பற்றி அறிந்த தகவல், செய்திகளைத் தொகுப்பாசிரியர்க்குத் தெரிவித்துதவலாம் என்பது எளியவன் கருத்தாம். ஸ்ரீலஸ்ரீ செப்பறைச் சிதம்பர சுவாமிகள் ஸ்ரீ மகாருத்ர ஜெபத்தை ஸ்ரீமகா ருத்ர பாத வணக்கம் என்ற பெயரில் தமிழ்ப்படுத்தியருளியுள்ளார்கள். தொகுப்பாசிரியர் அந்நூல்படி வேண்டுமென்று தெரிவித்தார்கள். ஓராண்டாக முயன்று சின்னாட்கள் முன் அந்நூலின் உலர்நகல்படி கைவரப் பெற்றளித்தேன்.
இந்நூல் இரு பிள்ளைத்தமிழ் நூல்களிலும் பாடல்களை எளிதாக வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் வசதியாக பதம் பிரித்து அச்சிட்டுள்ள பாங்கு பெரிதும் பாராட்டத்தக்கதாம்.
கோமதியம்மை பிள்ளைத்தமிழ் செங்கீரைப் பருவத்தின் ஐந்தாவது பாடலில் தலத்தில் பிரசாதமாக வழங்கப்பெறும் புற்று மண்ணின் சிறப்பும், பயனும் இனிதுணர்த்தப் பட்டுள்ளது. வருகைப் பருவத்தின் இறுதிப் பாடலில் “மானே வருக, உயிரனைத்தும் வளர்க்கும் அ(ன்)னையே வருக,” என்ற அடியில் பல்லுயிரையும் காத்தருளும் பராசக்தியின் கருணை வெளிப்படுகின்றது. இப்பாடலைத் திருநெல்வேலி, சுந்தர ஓதுவா மூர்த்தி அவர்கள் திருமகளார் தூத்துக்குடி, சிவ.கோமதி வள்ளிநாயகம் அவர்கள் பாடும் போது நம் ஊனும் உருகும். நீராடற் பருவத்தின் பத்துப் பாடல்களிலும் பொருநையின் பெருமை பாங்குடன் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், அம்பை வட்டம், கடையம் நகரின் பழைய பெயர் வளைசை என்பதறிய கலியாணியம்மை பிள்ளைத்தமிழ் உதவுகின்றது. காப்புப் பருவத்தில் பெரிதும் முதலில் விநாயகரைத் துதிப்பதே வழக்காகும். இப்பிள்ளைத் தமிழில் முதலில் திருமாலைப் பாடி மூன்றாவதாக விநாயகரைப் பாடியுள்ளார். தாலப் பருவத்தில் மூன்றாவது பாடலில் திருஞானசம்பந்தப் பெருமானுக்கு உமையம்மை பால் சுரந்தளித்தது மிக அருமையாகச் சொல்லப்பட்டுள்ளது. முத்தப்பருவத்தில் முத்துவகைகளெல்லாம் வியந்து பேசப்படுவது சிறப்பாம்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்னும் வகையில் இருநூறு பாடல்களாலான இந்நூலில் சில பாடல்களின் சிறப்பை உங்களுடன் பகிர்ந்தேன். இருநூறுமே இன்பம் பயப்பனவே. அன்பர்கள் இப்பாடல்களைப் பக்தியுடன் ஓதி இலக்கியச் சுவையைப் பருகிடவும், அம்மையின் திருவருளைப் பெற்றிடவும் வேண்டுமாய்ப் பிரார்த்திக்கின்றேன்.
அன்பர் பணி செய்ய ஆளாக்கிவிட்டால் இன்பநிலை தானே வந்தெய்தும் என்பதற்கிணங்கத் தமிழ்ப்பணிக்காகச் சைவப்பணிக்காக, இலக்கியப் பணிக்காகத் தன்னை அர்ப்பணித்து அல்லும் பகலும் உழைத்து வரும் அன்புக்கும் பாராட்டுக்குமுரிய அருமை நண்பர் திருவாளர். கம்பபாதசேகரன் அவர்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறத் தண்ணருள் நல்கியருள “கோவாகி வந்தெம்மைக் குற்றவேல் கொண்டருளும் பூவார் கழல் பரவி”த் துதித்தமைகின்றேன்.
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்,”
திருமால்நகர், அன்பன்
26-09-2015 மு.சு. சங்கர்
-------------
ஓம்
ஊற்றுமலை சமஸ்தானப் புலவர் புளியங்குடி முத்துவீரக் கவிராயர்
இயற்றிய திருநெல்வேலி மாவட்டம்
சங்கரன்கோயில் கோமதியம்மை பிள்ளைத்தமிழ்
1. காப்புப்பருவம்
கார் பூத்த கடல்புடை உடுத்த புவனத்தை
அரனார் கைக் கனிக்கு ஆசையாய்க்
கதிர்வேல் எடுத்து மயிலேறி வேள் சூழ்ந்து வரு(ம்)
முன்னம் அக்கடவுள் செய்ய
ஏர் பூத்த திருமேனியின் அண்ட கோடிகள்
நிறைந்தது என எண்ணி விரைவின்
ஈரடியினால் சூழ்ந்த ஒரு கோட்டு வாரணத்து
எந்தையை வணங்கல் செய்வாம்
நார் பூத்த கற்பகத் தருவே தவஞ் செய்து
தாரணியில் வந்து தோன்றித்
தண் நிழல் கொடுத்து வளர் புன்னையங் கானில்
சயம்பு வடிவாய் உறைந்த
ஆர் பூத்த செஞ்சடைப் பெருமான் ஓர் பாகத்து
அமர்ந்து உலகு எலாம் பயந்த
அன்னை கோமதி புகழ் துதிக்குந் தமிழ்க் கவிதை
யாவுந் தழைக்க என்றே! 1
திருமால்
பூ மேவு கமலப் பொகுட்டில் நான்முகனை
உந்திக் கமல மீது பூத்துப்
புவனப் பரப்பு எலாம் சிட்டித்து, மாருதப்
பெற்றேரனைப் படைத்து,
மாமேவு மானிட முதல் சகல உயிரையும்
மலர் வாளியான் மயக்கி,
மருவும்படிக்கு அருள் செய் மாதவனை யாதவனை
வந்தித்து வாழ்த்தல் செய்வாம்
காமேவும் இந்திராணி கஞ்சனம் எடுத்(து) எதிரில்
நிற்ப இரு கமலமாதும்
கவரி கை இரட்ட அரியாசன(ம்) மிசைக்
கந்தவேள் கயமுகத்தனோடு
மீமேவு கங்காநதிச் சடைக் கடவுளுடன்
வீற்றிருந்து அரசு புரியு(ம்)
மின்னார் இடைக் கவுரி பொன் ஆவுடைத்தேவி
மேனியைக் காக்க என்றே. 2
சிவபெருமான்
கடகரியின் உரி போர்வைக்கு வைத்தவர்
கனல் அரி நன்மதி பார்வைக்குள் உற்றவர்
கவின் உறு மன்மத காயத்தை நைத்தவர்
கலைநிறை தண்மதி காலிற் குமைத்தவர்
பட அர(வு) இன் அணி மார்பில் பரித்தவர்
பரவையின் வெவ்விட பானத்தின் மெய்த்தவர்
பகர் அரு சொல் மறை பாடித் துதித்தவர்
பதமலர் பன்முறை சூடிப் பழிச்சுதும்
குட வயிறன்னொடு கோழிக் கொடிக் கையர்
குதலையின் மென்மொழி காதுக்(கு) உவப்பவள்
குருகுல மன்னர் தூதுக்(கு) உரைத்தவர்
குலவிய முன்னவர் ஆகச் செனித்தவள்
வடமலை தென்மலையாகப் பணைத்திடும்
வடம் அலை பொன் முலையாள் உத்தமப் பரை
மரகத மன்னிய மேனிக் கயற்கணி
மடல் அவிழ் புன்னையின் மானைப் புரக்கவே. 3
சங்கர விநாயகர்
கங்கா சுபுத்திரன் கங்காளனுக்கு முதலான
கணநாதன் வெற்றிக்
கயமுகனை ஒரு கோ(டு) ஒடித்து வல்லாயுதம்
எனக்கொடு கனன்று வென்று
சங்கு ஆழி கை வைத்த தாமோதரக் கடவுள்
முதல் அமரர் பிழை தீர்த்த
சங்கர விநாயகன் செங்கமல பாதந்
தலைக் கொண்(டு) உவந்து பணிவாம்
கொங்கு ஆரு நறுமலர்ப் புன்னையங் காவு(ம்)
மறைமுடியு(ம்) அடியார் உள்ளமும்
கோயிலாக் கொண்டு வளர் கிள்ளையைப் பிள்ளைக்
கொழும் பிறையை நிகர் நுதலியை
மங்காத புகழ் பெற்ற இமயமலை அரசற்கு
மகளாக வந்த மயிலை
வரராசை அம்பதியில் உறவாய் இருந்த
கோமதியைப் புரக்க என்றே. 4
முருகன்
அரவையு(ம்) மதியையும் ஏர் சடைச் சூட்டி
வல் அரிணமும் அனலமும் ஆதரித்(து) ஏற்று
வெள் அடலையை உடலம் எலாமுறப் பூச்சிடும்
அமலனை மறை அறியாத சொல் கேட்டிட
வரமிகு குருஎனவே செவிச் சாற்றி
வளமையர் இளமையின் மீதினில் தோன்றி(ய)
அவ்வரையுர நெறிதரவே வேல் எடுத்து ஏற்றிய
வரை அரசு உரிய குமாரனைப் போற்றுதும்
பரவையின் அமுதையும் ஓதுவர்ப் பாக்கிய
பவள மெல்லிதழி பராவ நட் பாத்தரு
பதமலர் உமை பனிமா மலைப் பாக்கியப்
பயன் என வருமகள் பாடியிற் காட்டிய
குரவையர் துணைவி நிலா(வு) இவள் பாற்செறி
குளிர் தரு வன புனை நீழலில் பால் பொலி
குமரி என் அனை உமை ஆவுடைத் தாய்க்(கு) உடல்
குலவிய கவசமதாயுறக் காக்கவே! 5
நான்முகன்
திருமால் பொன் நாபி முண்டகம் அதில் உதித்(து)
ஒரு படைப்பில் அந்தத் தந்தையைச்
சிருட்டித்து மண் பொதுத் தந்தை என்னப் பெயர்
சிறந்த நான்முக தேவனை
அருமாமறைப் பொருளை அறிவிக்கு(ம்) மாதை
அம்தாலத்துன் வைத்திருக்கும்
அன்ன வாகனனை மன(து) என் அவாவுற உருகி
அன்பில் துதித்தல் செய்வாம்
வருமால் விடத்தை அமு(து) என உண்டு மரியாத
வாழ்வு கணவர்க்கு அளித்த
மங்கல சுமங்கலையை வெங்கலியை அடியர் பால்
வாராது வீட்டி என்றும்
பெருமா மகத்வ செல்வந் தந்த மறுமையில்
பேறும் கொடுக்கும் ஞானப்
பேர் ஒளியை ஆவுடைப் பரதேவியைத் தினம்
பேணிப் புரக்க என்றே! 6
இந்திரன்
அண்டப் பரப்பு எலாம் வெடிபட முழங்(கு) உருமின்
ஒலியும் மின்னான கோடும்
அகிலங் குழிந்திடப் பொழி தாரை மதமும் மற்று
ஆகம் கறுத்த வேகக்
கொண்டல் கயத்தை வெண்கயம் அதனினும்
பிரியமாக் கொண்டு உலாவும் விண்ணில்
கோமகனை இந்திராணி தலைவனைச் சலச
மென்குளிர் சரனை ஒத்தல் செய்வாம்
தண்டத்தை வைத்த கைச் சமனையுள் வெரு(வ) அவன்
தரளால் சமட்டி வென்று
தவமுனி குமாரனுக்கு அழியாத ஆயுள்
தந்தவரைக் கலந்து தழுவும்
வண்டைப் புனைந்த கைக் கோமளக் கோமதியை
வரராசை மேவு குயிலை
வாலை அம்பிகையை விணின் மேலை வானவர்பரவு
மாதங்கியைக் காக்கவே! 7
திருமகள்
திங்கள் புதுக்கலை நிலாத் திரள் விரிந்து எனத்
திரை விரிக்கின்ற சீரத்
தெண்கடற்பள்ளியும் செம்பொன் ஆடையும்மணி
இழைத்த அணிதிகழ்மகுடமும்
வெங்கதிர்க்(கு) ஆயிர மடங்(கு) ஒளி பரப்புங்
கௌத்துவ மணியும் படைத்து
மேதினி புரக்கும் விதி கணவர்க்கு நல்கு திருமாது
அடி வியந்து ஏத்துவாம்
தங்கச் சிலைத்தனுத் தாங்கி முப்புர நகைத்து
அழலினிற் சாம்பர் செய்த
சங்கரக் கடவுள் ஒரு பங்கின் மேவிய பராசத்தி
மலையரசன் மனைவி
அங்கைத் தலத்தினில் எடுத்து மகிழ்வு எய்த
மகளாக வந்து அவதரித்த
அன்னை கோமதி மலர்ப் புன்னையங்கா
மயிலை அன்புடன் காக்க என்றே! 8
கலைமகள்
இவளவு என்று அறியா உல(கு) யாவையும் எளிதில்
நன்கு செய் நான்முகர் தாலுவும்
தவள முண்டக(ம்) மீதினு(ம்) மேவிய தவள
அம்பிகை தாள் இணை பேணுவாம்
கவள வெம்கரி ஈர்உரி மூடிய கனலில் நின்று
ஒளிர் மேனியர் பால் உறை
குவளை எண்கணி கோமதி பார்வதி குவலையந்
தருதாய் தழைவாகவே! 9
ஏழு மாதர்கள்
வண்டமிழ்ச் செல்வியைத் திரோபவ மகேசுவரியை,
வளர் எவன கௌமாரியை,
மன் உயிர் புரக்கும் நாரணியை, உலகைப் பெயர்கும்
கோட்டு வாராகியை,
மிண்டரை அடக்கு காளியை, இந்திரற்கு அரசு
மிக நல்கும் இந்திராணியை,
வேணவாவொடு கமலம் நாண வாய்த்திட்ட செழு
மெல்லடியை வாழ்த்தல் செய்வாம்
கொண்டலைத் தண்டலையை அறவினைச் சைவலக்
கொத்தைக் கடிந்து கணவர்
கோடீரம் உற்றது என மதலையைச் சற்று உறவு
கொண்ட பூங்குழலி மதுரக்
கண்டை அமுதைக் கனியை நனிவரும் பச்செயுங்
கனிவு தரு கிள்ளை மொழியாள்
காமாரி பாகத்து மேவும் ஆவுடை அம்பிகைக்
கன்னியைக் காக்கவே! 10
முப்பத்து முக்கோடி தேவர்கள்
முலை நிலத்தினில் ஆயர்கள் பாடியில்
முனம் நிரைத் துயர்தீர்தர வேய் இசை
முளரி ஒத்த செவ்வாய் இடையே தரும்
முகிலினைப் பொரு மேனியர் சோதரி
பல கலைத்தமிழ் மாமகள் தேனுறை
பதும் மெத்தையள் சேடியராய் ஒரு
பணிவிடைக்கு அருள்வாய் எனவே எதிர்
பரவி நித்தலுமே வழிபாடு செய்து
இலகு பொற்பத மாமலரள் இறை
இனி(து) உறப் பிரியமா உரை பேசிய
இலவை ஒத்து எழிலார் இதழ் வாயினள்
இரலையைப் பொரு வேல் நிகர் கோவினில்
உலகினைத் தரு தாய் வரராசையில்
உறு மகத்துவ கோமதி நாயகி
உடலினுக்கு உறுகாவலர் ஆனவர்
உயிர் நிலத்து உறை தேவர்கள் யாருமே 11
--------------------
2. செங்கீரைப் பருவம்
பரிமள மிகுந்த நீராட்டி மரகத ஒளி
பரப்பு திருமேனி எல்லாம்
பட்டாடை கொண்டு ஒற்றி ஈரம் புலர்த்தி
மலையரசன் மனையாட்டி பவள
விரிகுமுத வாயினான் மென்காது கண்உந்தி
மேவு நீர் ஊதி நீக்கி
வெண்பிறையை நிகர் நுதலில் மண் பொட்டும் இட்டு
மடி மீதினில் இருத்தி மலையில்
பெரிய தன அமுதூட்டி உலகெலாம் பெற்ற
அனையைப் பிள்ளையாய்ப் பெற்றிடும்
பேறு எவர்க்கு எய்தும் என ஈறிலா ஆனந்த
பெருவளமதாய் வளர்த்த
திருமகள் நிறைந்த சீராசை அம்பிகை தேவி
செங்கீரை ஆடி அருளே!
தேன் மொய்த்த புன்னையங் கானில்
பசுங்கிள்ளை செங்கீரை ஆடி அருளே! 12
அரி பிரமாதியர்கள் அனைவரையும் வந்தனை செய்
அம்புயத் திருவடியில் ஒன்று
அவனிமான் முடி சூட்டி ஒன்றினை மடக்கி
அருள் ஒழுகு திருமுகம் அசைத்துப்
பிரியமுற்று இமையரசன் மனைவி அனைவாஎன்று
பேசி இருகையை நீட்டப்
பின்னிட்டு நீசெலப் பேதையாம் நீஎனைப்
பேதையாக்கினை கொல்என்ன
ஒருமுத்தம் இட்டுமடி மிசைவைத்து விளையாட
ஒளிர் முத்த மூரல் காட்டி
ஒண்திரைப் பரவை அமுது உண்டவா எனத்தாய்க்கு
ஓர் ஒப்பிலா மகிழ்வு நல்கும்
திரிபுவன நாயகீ சீராசை வளர்தேவி
செங்கீரை ஆடி அருளே!
தேன் மொய்த்த புன்னையங் கானில் பசுங்கிள்ளை
செங்கீரை ஆடி அருளே! 13
ஐவகைக் கடவுளரை ஐவகைச் சத்திகளை
ஐவிழிக்கடை நோக்கினால்
ஆக்கியவரால் ஐந்து தொழிலையும் நடத்திடச்
செய்து அதில் ஓர் பற்றும் இன்றி
மெய் வளர் பரப்பிரம வத்து வினை நீங்காது
மென்மலரின் மணமும் எண்ணின்
மேவு நெய்யும் போல ஓவிலாது ற்று இன்ப
வெள்ளம் திளைத்து வாழும்
சைவ மறை முடிவே பராசத்தியே
தத்துவாதீதமான பொருளே
சாமள சொரூபியே கோமளக் குன்றத்
தனத்து அமுதம் ஊட்டி வேலவன்
தெய்வ விக்கினேசனை வளர்த்து அருளும் அன்னையே
செங்கீரை ஆடி அருளே!
தேன் மொய்த்த புன்னையங் கானில் பசுங்கிள்ளை
செங்கீரை ஆடி அருளே! 14
சருவ லோகத்தையும் தங்கிய அரா உலகு
தன்னில் வளர் சங்கபத்மர்
சைவமும் வைணமும் ஓர்ந்து இருவர் தங்களில்
சமைய வாதம் புகன்று
மருமலர்க் கற்பகத்து இறை உலகினில் சென்று
மன்னு விடை உரைக்க
மற்றவர்க்கு அரி அரனும் ஒன்று எனத் தெளிவிலா
வன்மையை உணர்ந்து நீவிர்
உரிமையுடன் வரராசை யுற்று நற்றவம்
உஞற்றிடில் இருவுருவும் ஒன்றா
உங்களுக்கு அறியலாம் என்றபடி அவர் தவசு
உகந்து செய ஒருவடிவமாய்த்
திருவுருவு காட்டியவர் மருவிய பராசத்தி
செங்கீரை ஆடி அருளே!
தேன் மொய்த்த புன்னையங் கானில் பசுங்கிள்ளை
செங்கீரை ஆடி அருளே! 15
வெவ்வேறதாய் முன்பு செய்த வினை வழியாய்
வியாதிகள் அனேகம் உடலின்
மீறிவரின் அவ்வவற்றிற்கு ஒரு மருந்தாய்
விதித்தவை எலாம் அகற்றி
எவ்வாறதாய் வரினும் எல்லா வியாதிக்கும்
ஏற்றிடு மருந்து ஒன்றதா
இமையவர் உண் அமுதினும் இனிதான புற்றின்
நன்மருந்து அளித்து இனி வராது
மைவார் கடைக்கண் அருள்செய்து சங்கரர் பாக
மருவிக் கலந்த மானே
மானத தியானம் புரிந்து பணி அன்பர்
பிறவிப் பிணிக்கும் மருந்தே
செவ்வேளை ஈன்ற கோமதி பராசத்தியே
செங்கீரை ஆடி அருளே!
தேன் மொய்த்த புன்னையங் கானில் பசுங்கிள்ளை
செங்கீரை ஆடி அருளே! 16
வேறு
முருகலர் பொதுளிய பொழில் இசை மலையம் உறுஞ்சீர் விஞ்சார
முதுமணம் விரவி நல்வளமையின் மழலை மொழிந்து ஆடுஞ் சேய் போல்
வரும் வளி புனைவன நடுவினில் உலவி மதன்தேர் என்று ஓதும்
வழுவினை அழிவு செய்வரம் அருள் பெற உள் மகிழ்ந்தே பொன் கோயில்
பெருமதிள் தடவி உன் பெயர்தர விரைவொடு பின்தாழ் மின் பாரப்
பிறைமுடி உடையவர் பிரிய நன்நடம் இடுஞ்சீர் குன்றாத
திருவுறு சக கயிலையின் மருவிய கொடி செங்கோ செங்கீரை!
சிலைமகள் என ஒரு பெயர் பெறு தலைமகள் செங்கோ செங்கீரை! 17
பதமிசை பரிபுர மன மொழி என முரல் பண்போடே ஆடப்
பலமணி விரவிய எழில் வளை இருகை பரிந்தோ டாதாட
இதமிதம் இடை இறும் என மணி வடம் ஒலியின் சீரோடு ஆட
இணர் மலர் பொதுளிய குழலிடை அளிகள் எழுந்தோடோடு ஆட
விதவித உயிர்களை உதவிய வயின் வட மென்பா சிலை ஆட
விகசித கமலமும் விளறிட விறல் தரு மின் சேர் முகம் ஆட
அதர நல்அமுதுகு மொழிபயில் கோமதி ஆடுக செங்கீரை!
ஆதி வராகி பொன் ஆவுடை அம்பிகை ஆடுக செங்கீரை! 18
மதிமிசை தவழ்தரு கருமுகில் என முக மதிமிசை இசை பாடு
மதுகர நிரைநிரை கதுவிய புரிகுழல் வணர் வார்சடை ஆட
விதி புனைதரு தொழில்தரு பிருகுடி மிசை மிளிர் வாள் நுதல் மீதின்
வெயர்தரு தரளமொடு உறழ்தரு தரள மிகுஞ் சுட்டியும் ஆடக்
கொதி விடம் அமுது அன இருவிழி தடவிய குழைசெவி குழை ஆடக்
குடமலை அலைதர மலைதரு தனம் வரு குளிர் மார்பகம் ஆட
அதிரகசிய பரவெளியினில் உறைபவள் ஆடுக செங்கீரை!
ஆதி வராகி பொன் ஆவுடை அம்பிகை ஆடுக செங்கீரை! 19
மண் தலமும் உயர் விண் தலமும் பணி வண் தலமும் ஆட
மரகத மேனியின் ஒளி கஞலிக் கதிர் மணியை மறைத்து ஆட
வெண் திரை மகள் முதல் எண் திருமாதரு(ம்) மென்கை குவித்து ஆட
மிளிர் மறையாதிய பல கலையாவு(ம்) நின் மெய்ப் புகழ் கொண்டாடத்
தொண்டர்கள் புண்டரிகப் பத மேன்மை துதித்து மதித்து ஆடச்
சூலுறு சேய் முதலாய உயிர்த் தொகையும் சுழல் உற்று ஆட
அண்டம் அனைத்து நிரைந்த பராபரை ஆடுக செங்கீரை!
ஆதி வராகி பொன் ஆவுடை அம்பிகை ஆடுக செங்கீரை! 20
ஏடலர் கொன்றையும் ஆரு(ம்) நிறைந்த சடாதாரி
ஈசனொடும் திருமேனி ஓர் பங்கினில் வாழ் பாரி
தாடலை கொண்டவர் சார் பவ சங்கட நீள் வாரி
தாழ விழும் பொழுது ஓர் பெரு வங்கமதாய் வாரி
நீடு பெருந்தனி வீடு அருள்கின்ற கிருபா சீலி
நீன் முகில் வந்துறை மாடமு(ம்) மேடையும் ஓர் கூரும்
ஆடக மன்றமு(ம்) மேவிய ராசை மின் ஆடுக செங்கீரை!
ஆதி வராகி பொன் ஆவுடை அம்பிகை ஆடுக செங்கீரை! 21
--------------------
3. தாலப் பருவம்
புவனம் அனைத்தினையும்
துணைக்கண் கடையில் தந்து அளித்தும்
துகினம் படர்ந்த வரைக்கு அரசன்
மகிழும் தவத்தால் மகவாக வந்த
மயிலே மா மறைநூல்
வாக்கியமுந் தேர்ந்து அறியாத
வடிவே! புன்னைவனக் குயிலே!
எகினம் பிடியும் தொடர்ந்து நடை
இயற்கை அறியச் சிலம்பு அரற்ற
எழில் பூவடி மென்மெலப் பெயர
எய்தும் கிளியே எனப் போற்றி
அகிலம் பரவும் வரராசைக்கு
அரசே! தாலோ தாலேலோ!
ஆல கண்டர் மருவிய
அம்பிகையே தாலோ தாலேலோ! 22
ஈட்டும் கனகச் சுவர் ஏற்றி இலகு
மணிகள் குயிற்றி விண்ணை
எட்டிப்பார்க்கு மாட நிரை
ஏந்து சிகரத் தலை மீதில்
தீட்டும் வரியில் தாரகைகள் சிறக்கும்
வானத்து எழுந்த செழும்
திங்கள் இறங்கி உடற் களங்கம்
தீர்க்கும் மருந்து தேவர்கள் விண்
நாட்டு மருந்தின் மேலான நல்ல
மருந்து நின் கணவர்
நல்கும் புற்று மருந்து என உள்
நயந்து வரியால் துகிலை அசைத்து
ஆட்டும் கொடிப்பால் வரு ராசைக்கு
அரசேதாலோ தாலேலோ!
ஆல கண்டர் மருவிய
அம்பிகையே தாலோ தாலேலோ! 23
கரும்பும் தேனும் ஞிமிரும் வண்டும் தொடரும்
தொடையல் கூந்தல் நல்லார்
துணைப் புரூர வில் எடுத்துச் சுடு
வெங்கூர்மைச் சுடர் விழியைப்
பொரும் புங்கம் என முயன்மானும் புழுங்க
மதி தோய்ந்து உம்பரில் போய்ப்
பொன் நாட்டவ ரோடு இவர் உறவு புரிய
உயர்ந்த மாளிகையும்
கரும்பும் கமுகும் கதலியும் பைங்காய்ப்
பூந்தாழை மா பலவும்
கஞலி எழுந்தாய் ஆயிரங் கிரணக்
கடவுள் தேரைத் தடுக்க மலர்
அரும்பும் பொழிலும் செறி ராசைக்கு
அரசே தாலோ தாலேலோ!
ஆலகண்டர் மருவிய அம்பிகையே
தாலோ தாலேலோ! 24
தமரக் களி வண்டு அடை கிடந்து தண்தேர்
நுகர்ந்து வரி பாடும்
தாமக் குழலார் பூ மெத்தை தன்னில்
கணவரோடு ஊடிக்
குமரக் கடவுள் கை வேலில் கூர்த்த
விழி முத்தொடும் எறிந்த
குளிர் முத்தாரம் அன்னவர் ஊர்
குலவாம் பரிக்காலால் குமைக்க
நிமிரப் பரந்து பொன் மாட நிரை மேல்
அதை தீற்றியது என்ன
நிலவி அந்த நீள் ஒளிகள் நீல
நிறத்து இந்திரன் வாழும்
அமரர் பதிக்கும் புகும் ராசைக்கு
அரசே தாலோ தாலேலோ!
ஆல கண்டர் மருவிய அம்பிகையே
தாலோ தாலேலோ! 25
பள்ளத் தடத்துள் கண்டகத் தாள் பதுமா
சனத்தில் வெண் டோட்டுப்
பதும மிசை வீற்றிருந்து கலை
பலவும் புகன்ற நாமகள் தன
உள்ளத்து அரனும் அரியும் ஒன்றாய்
உற்ற வடிவம் கருதி உணர்ந்தி
யோகத்து இருந்து நீ காணும் தன்மை
போல் காணுற ஓர்ந்து
வெள்ளைத் திருமேனியின் நீறு பூசி
விமலத் தவம் உஞற்ற
மேயது என்ன மென்ஞடைப் பைஞ்சூட்டு
செங்கால் வெள்ளம்எம் சேர்
அள்ளல் பழன வரராசைக்கு அரசே!
தாலே தாலேலோ!
ஆல கண்டர் மருவிய அம்பிகையே
தாலே தாலேலோ! 26
வேறு
மீனத் துவசம் உயர்த்திடு வழுதி செய் மேலா(ம்) நோன்பாலு(ம்)
மேனைத் திருமகளைப் புணர் வரை இறை மேல் ஒர் மாண்பாலு(ம்)
கானல் கடல் இறை கமலாலயன் வெகு காலத் தவசாலும்
காதற்கு இசைதரு சேயில் பொலிவுறு கருணைக் கடலே பொன்
வானத்து அமரர்கள் கோனுக்கு ஒரு மகவாய் உற்றிடு மாது
மானில் தரு மலைவாணர்க்கு இசை மகவா(ம்) மைக்குழல் மாதும்
தானற்புத மருகியராய் மகிழ் மயில் தாலே தாலேலோ!
சங்கர நாரணர் பங்கிலுறுங் கிளி தாலே தாலேலோ! 27
அருமறையிளின் உபநிடத நன்முடி மிசை அமர் வேல் கயலாக
அழகு செய் இருவிழி அறிதுயில் புரி உனை அறியா அடியேங்கள்
ஒரு சிறு மகவு என மனதினில் நினைவு செய்து ஓம்புதல் போலாக
உற்றிடு பேதையை பெற்ற புல்லறிவை இவ்வுலகத்தவர் அறியக்
கருமணி கால் இரணியம் அது பலகை கவின் சேர் வடமாகக்
கதிர்மணியில் புரி தொட்டிலையும் ஒரு பொருளாய்க் கண்வளர்வாய்
தரும நன்னெறி வளர் சக கயிலையின் மயில் தாலோ தாலேலோ!
சங்கர நாரணர் பங்கினுறுங் கிளி தாலோ தாலேலோ! 28
புண்டரிகத்தில் இருந்து விதித்திடு போதாவும்
பொன்றிடு மட்டும் உயிர்க்குறு போகம் இது என்று ஓதிக்
கண்டிதம் இட்ட எழுத்தையும் மாமகிடத்து ஏறிக்
கண்கள் சிவக்க உருத்து வெறுத்திடுகால் கோபங்
கொண்டு பிடித்திடு தத்தையுமே குளிர் பொற்பாதங்
கும்பிடு பத்தியருக்கு விலக்கு குணத்தாயே
தண்டலை சுற்றிய புன்னைவனக் குயில்தாலே தாலேலோ!
சங்கர நாரணர் பங்கில் உறுங் கிளி தாலோ தாலேலோ! 29
அரவரசு ஏந்து கடற்புவி ஏழினு(ம்) மேலான 4
அரிய தவம் புரி கரும புவிக்குள் அகம் தோயப்
பரவிய செந்தமிழ் நாடு படைத்த பயன்கூர்
நற்பதிகள் ஆனந்தம் அதில் பவ பஞ்ச மலந்தீர
விரவிய தொண்டர் பணிந்து வணங்கு மிகுஞ் சீர்சால்
மிகு தலம் ஐந்தினும் ஐந்து பெருந்தலம் என்று ஓதும்
தரமிகு ராசை தழைந்திட வந்தவள் தாலோ தாலேலோ!
சங்கர நாரணர் பங்கில் உறும்கிளி தாலோ தாலேலோ! 30
வேறு
காருக்கு எதிர் மயில் ஏறிப் பவனி கொள் காதற் பெறு சேயும்
காதிப் பொரும் ஒரு கோடு உற்றிடு கயமாவத்திர தேவும்
வார் உட்கிட வரு மேருத் தன மலர் வாய் வைத்து உண நீயும்
வாலைக் குழவியதாகப் பெயர் பெறு மாயைத் திரு மாதே
பட தேருட் கதிருடன் மீதிற் பொலி ஒளி போலத் தளிர் சேரும்
தேன் நற்கனி தரு சூதத் திரள் பல நாரத்தைகள் ஆரத்
தாருச் செறி வள ராசைப் பதி உமை தாலோ தாலேலோ!
சங்கர நாரணர் பங்கில் உறுங்கிளி தாலோ தாலேலோ! 31
--------------------
4. சப்பாணிப் பருவம்
வெளிர்த்த துகில் கட்டு கொடிகள்
விண்டுவொடு சண்டை இட்டு அந்தழல் கிரிமுடி
விருப்பினொடு காண எண்ணி
மண் பொதுத் தந்தை தன் வாகன உருக் கொண்டு
வானில் பறந்தது என்ன
வளி அசைத் திட இம்பர் மானிடர் கண் மேல் நோக்கம்
வைத்து இமை இமைத்திடாது
கண் பொருந்தாத தன்மையினால் விணவர் எனக்
கண்டவர் வியக்க மூன்று
காலத்தும் அழியாத பூ கயிலை காணியாய்க்
காதலுற்று உறையும் அம்மே
தண் பொலியும் அம்போருகக் கரங் கொண்டு நீ
சப்பாணி கொட்டி அருளே!
தாவுடை விடைக் கடவுள் மேவும் ஆவுடை அம்மை
சப்பாணி கொட்டி அருளே! 32
திரு மருவு கயிலைவரை தன்னில் ஒரு ஞான்று
தென் பொதிய வரையில் பிறந்த
சிறுகால் தவழ்ந்து உலவு பன்மரக் கோட்டி
செறி திவ்விய உத்தியானத்தினில்
பருவம்இரு மூன்றினில் வசந்த பருவத்தினில்
பார்த்தவுடன் கலந்து பயிலும்
விளையாட்டின் இடை கண்பொத்து தீமையைப்
பாற்ற அவர் உத்தரவினால்
கரும பூமியினில் சிறந்த காஞ்சியில் வந்து
கருதரிய தவம் உஞற்றும்
காலத்தில் இருநாழி நெற்கொண்டு காத்திடக்
கருணை வைத்துச் சிறந்த
தரும(ம்) முப்பத்திரண்டும் புரி கரத்தினால்
சப்பாணி கொட்டி அருளே!
தாவுடை விடைக் கடவுள் மேவும் ஆவுடையம்மை
சப்பாணி கொட்டி அருளே! 33
பனி மலைக்கு அரசனும் அவன் மனைவி மேனையும்
பண்ணிய தவோபலத்தால்
பணிலத்தின் முத்து எனத் தோன்றி வளர் நாளில் வான்
பண்ணவர்கள் நோன்பு இயற்று
முனிவர்கள் குழாத்தோடு முக்கண் பரம்பொருள் வெண்
மூரிவிடை ஊர்ந்து வந்து
முதுமறை விதிப்படி விவாகச் சடங்கினை
முடித்திடும் பொழுதில் ஆறாம்
இனிய சுவை அமுதினைப் பொற்கலத்தினில் வாக்கி
இனிது ஊட்டும் இதழ் அமுது என
இசைய மிசையும் படிக்கிட்டு ஊட்டும் இனவளை
செறிந்து ஒப்பு இலாது இகந்த
தனி மலர்க் கையினால் நனிஉளம் மகிழ்ந்து நீ
சப்பாணி கொட்டி அருளே!
தாவுடை விடைக் கடவுள் மேவும் ஆவுடைஅம்மை
சப்பாணி கொட்டி அருளே! 34
உய்வந்த நாளையில் தேவருக்கு எய்த ஒண்
கடல் விடம் அயின்ற கடவுள்
உடல் உயிரும் ஒன்றாக் கலந்து உள மகிழ்ச்சியாய்
உரிமை உடனே பயந்த
தெய்வம் தமக்கு எலாம் முதலாய எறுழ் வலிச்
செங்கண் மூடிகம் இவர்ந்த
திரி நேத்திரதாரியாம் பாசாங்குசக்கரச்
செல்வனையும் அமரர் நாடு
கைவந்திடக் கவர்ந்து ஈரைநூறுடன்
எட்டதாய்க் கணக்கிட்ட அண்டங்
காவல் புரி அவுணன் உயிர் வீட்டு கந்தனை
உள் கசிவுடன் எடுத்து அணைத்துத்
தைவந்த வியன் மணம் கமழ் தாமரைக் கையால்
சப்பாணி கொட்டி அருளே!
தாவுடை விடைக் கடவுள் மேவும் ஆவுடை அம்மை
சப்பாணி கொட்டி அருளே! 35
இந்து ஆயிரத்து ஒளி பரப்பும் எழில் முகமும் அதில்
இணைமான் எனத் திகழ்ந்து
இருவிழியும் விடம் உண்ட ஈசனுக்கு இன்புற
இன்னமுது உதவு பவளவாயும்
நந்தாரு முத்தினை நகைத்த நகையும் கௌர
நன்னிறத் திருமேனியும்
நாட் கமலமலர் அனைய பொற்றாளும் உள்ளத்தில்
நாடி உயர் தொண்டருக்குச்
சிந்தாகுலம் தவிர்த்திட இல்லறத்தினைச்
சேர்ந்த மனை மக்கள் சுற்றம்
செல்வம் வாழ்நாளும் மறுமைக்கு உறுதிய
மோட்ச செல்வமும் தேவ நாட்டுச்
சந்தானமும் வெட்க நல்கு செங்கையினால்
சப்பாணி கொட்டி அருளே!
தாவு விடைக் கடவுள் மேவும் ஆவுடை அம்மை
சப்பாணி கொட்டி அருளே! 36
வேறு
தங்கக் கிரிசிலை வெங்கண் பணி குதை
தங்கத் தழுவிய வடம் ஓர் கைச்
சங்கைப் புனை முகில் அம்பு இப்புவி உயர்
சந்தப் பெருரத மறை மான் ஊர்
துங்கத்தவன் அரவிந்தத்தவன் உருள்
துன்றக் கதிரவர் இருவோரும்
தொந்தப் பட அரன் அன்று அப்புரம் அது
துஞ்சப் பொர எழுதிறல் வாம
செங்கைத் தனு விசை அந்தக்கரமொடு
செம்பொற் கண நிறை தரு சீரம்
சிந்தைக்கு இசை தரு சண்பைக் குமரர்
திருந்தத் தமிழ் தர அருள்கின்ற
கொங்கைத் தரு வலம் மென்கைத் தளிர்கொடு
கொட்டுக சப்பாணி
கோமதி அம்பிகை புன்னைவனக் குயில்
கொட்டுக சப்பாணி 37
பறைவரை அற்று உக வரிதரு வச்சிர
பாணி முதற் கடவுளர் யாரும்
பவன மரக்கனி சருகு சலத்துளி
பருகி உடற்பொறை மிக வாடக்
கறையறு மெய்த்தவ விரதம் உஞற்றிய
கரு தரு சித்தர்கண் முனிவோரும்
கவின் நல முற்றிய கணபண கட்செவி
கதுவுலகத்தவர் முதல் யாரும்
நிறைவுற நித்தமு(ம்) மலர் கொடுன் அற்புத
நிமில பதத்துணை வழிபாடு
நிலைபெற வைத்திட அவர்கள் நினைத்திடு
நினைவின் இரட்டிய வரம் நல்கிக்
குறைவு தவிர்த்து அருள் அரச வரைக் கொடி
கொட்டுக சப்பாணி
கோமதி அம்பிகை புன்னைவனக் குயில்
கொட்டுக சப்பாணி 38
பட அரவத் தலை இடம் என வைத்துறை
பரவை உடைப் படர் நிலமாதின்
பருவ முகில் குல கருநிற கச்சிடு
பலமணி துற்றிய இரு பாரத்
தடமுலை ஒத்திடு பொதியம் உயர்த்திடு
கைலை வரைச் சமம் உறமேனாள்
சகல உயிர்க்கு உயிர் எனும் அரன் நட்பொடு
தருவன் உனக்கு நன்மண சேவை
விடை பெறு தெக்கணம் நிலைபெற இக்கணம் என
விமலற்கு உளம் மகிழ்வாக
விரைவினில் அப்பொதிய மலையின் உற்று அவண்
விழை தமிழுக்கு உறையுள் அதாய் வாழ்
குட முனி அற்புடன் வழிபடு சிற்பரை
கொட்டுக சப்பாணி
கோமதி அம்பிகை புன்னைவனக் குயில்
கொட்டுக சப்பாணி 39
செஞ்சிகை எங்கு நிரந்து பரந்து
செழுந்திசை சென்றாடச்
செங்கையின் அங்கி சிவந்து கொழுந்து
சினந்து சினந்தாட
மஞ்சு இவருங் களம் மிஞ்சு விடம்துடி
கொண்டு மலர்ந்தாட
வன்பணி என்று சொலும் பணியும் புய(ம்)
மண்டி மலர்ந்தாட
அஞ்சன குன்ற(ம்) மலைந்த வகிர்ந்த
அரும் துகில் மேலாட
அம்பொன் நெடுஞ்சபை நின்று நடம்புரி
அம்புயம் என் கூறும்
குஞ்சித பாதரொடு ஆடு மடக்கொடி
கொட்டுக சப்பாணி
கோமதி அம்பிகை புன்னைவனக் குயில்
கொட்டுக சப்பாணி 40
எட்டு வரைக் குல(ம்) நான்கு புறத்தினும்
இட்ட சுவர்த் தலமாம்
எழு முகிற் குலம் ஏந்து மணிச் சிகரத்து
எழிலாய் உலவக்
கட்டு கொடித் தொகை ஆடுபொன் மாளிகை
காமுறு பொன்மலையாய்க்
காதன் மிகுத்திடு மாதர்கள் உம்பர்கள்
காவுறை கன்னியராய்ப்
பட்ட நுதற் கரியாய் பரி செல் தெரு
பாடுறு நாற்றிசையாய்ப்
பாணர்கள் பாடிய யாழிசை வார்விசி
பம்பிய பற்பலவாய்க்
கொட்டும் இயத்தொனி நீடிய ராசையள்
கொட்டுக சப்பாணி
கோமதி அம்பிகை புன்னைவனக் குயில்
கொட்டுக சப்பாணி 41
--------------------
5. முத்தப் பருவம்
மாலையும் செய் இருந்தவத்தால்
எழிலார் மதுரை தழைக்க
மகவாய் வந்து இரத்தின முடிசூட்டிக்
கறையார் கண்டக் கடவுளுடன்
கலந்து கயற்கண் அம்பிகையாய்க்
கதிர் மாமதியின் வழி வளரக்
கலைதேர் உக்கிர வருமனையும்
தறை ஆள்வதற்குத் தந்த சௌந்தரியே
சகல குலத்தவரும்
தங்கள் தங்கள் முயற்சியினால்
தரும் ஊதியத்தால் அறம் புரிந்து
முறையாய்ச் செல்வம் செறி ராசை முத்தே
முத்தம் தருகவே!
மூல முதல் ஆறு ஆதார முதலே
முத்தந் தருகவே! 42
பிடியாய் அனமாய்ச் செலு(ம்) நடையும்
பெருமா மத வெங்கயத் துதிக்கை
பிறைபோல் வளையச் செயும் துடையும்
பிறங்கு நவ நன்மணி இழைத்துத்
துடிபோல் இடையைச் சூழ் கலையும்
துளிர் ஆலிலை போல் சுடர் வயிறும்
சோமன் இரவி குளிர் வெம்மை
தோற்றுந் துணை மேருக் குயமும்
வடி ஏர் மதிய நிகர் முகமும் மலர்
வாசனைக்கும் இயற்கை மணம்
வகுத்த குழலும் கண்டு கண்டு மகிழ்ந்து
மதுப் பூங்கொன்றை அணி
முடியார் ஆசை புரி ராசை முத்தே
முத்தம் தருகவே!
மூல முதல் ஆறு ஆதார முதலே
முத்தம் தருகவே! 43
பூ வாழ் பிரமன் உலக இன்பம்
பொன்றும் அவன் கற்பகத்தின் வரை
புண்டரீகக் கண்ண ன் உலகத்து
இன்பமும் அப்படிப் போகும்
தேவாதிபனாம் இந்திர இன்பம்
தேறுங்கால் மற்று அதில் கீழாஞ்
சிறிய மானுடர் உலக இன்பம்
செப்புவவதற்கோ மிகச் சிறிது என்று
ஓவாது உனது திருவடிக்கே
உற்ற தொண்டாய் வழிபடுவோர்க்கு
உரைக்கும் எதிர் நிகழ்வு இறப்பு என்று
ஓரும் காலம் மூன்றினிலும்
மூவா இன்பம் தரு ராசை
முத்தே முத்தம் தருகவே!
மூல முதல் ஆறு ஆதார
முதலே! முத்தம் தருகவே! 44
நாக முத்தும் கழையின் முத்து
நவில் செஞ்சாலி நல்கு முத்து
நால்வாய்க் கோட்டின் உள் இருந்து
தோன்றா முத்து நளிர் செய் கரு
மேக முத்தும் சங்கின் முத்து
மேலா நினது நகை முத்தை
மேய துணையாம் எனின் நூறு
ஆயிரத்தோர் கூறும் விளம்ப அரிது என்று
ஆகமுத்தப் பருவம் உரைத்தவர்
முன் உரைத்தார் அதை அறிந்தும்
அடியேன் உரைக்கில் பயன் என்னாம்
ஆதி சங்கரேசுரற்கு
மோக முத்தம் தரு ராசை
முத்தே முத்தம் தருகவே!
மூல முதல் ஆறு ஆதார
முதலே! முத்தம் தருகவே! 45
கைத்த கடலில் பிறந்து விலை
கருதாது இருக்கும் கவின் துவரே!
காலைக் கதிர் கண்டு அலராமல்
தானே அலர்ந்து கமழ்பூவே!
செய்த்தலையின் நீர் விரும்பாது
திகழ் பாகு ஊறும் செழுங்கரும்பே!
சேயாய்க் காகம் வளர்க்காமல்
தானே வளர்ந்த செவிக்குயிலே!
மைத்த மேகத்தில் கூடி
வானில் சுழலா வள மின்னே !
வண்டும் தேனும் இசைபாடி
மகரந்தங்கள் இறைக்க மணம்
மொய்த்த மலர்ப் பூங்குழல் ராசை
முத்தே! முத்தம் தருகவே!
மூல முதல் ஆறு ஆதார
முதலே! முத்தம் தருகவே! 46
வேறு
நிம்பச் செழுந்தார் தரித்த உக்கிர வழுதி
நின் சாபம் உற்ற புலையன்
நிலையினன் மணிக்கிரீபன் நீயும் நின் கணவனும்
நெடுஞ்சினை தழைத்த புன்னை
பம்புற்ற வனம் உறைதல் கண்டு உரைத்திட வந்து
பார்த்து உள மகிழ்ந்து போற்றிப்
பகர் அரிய பேரின்ப வெள்ளத்தில் ஆழ்ந்து பல
மணி கொண்டு இழைத்த நீடு
தம்பத்தின் மேல் தமனியத்தால் சமைத்த
உத்திரம் ஏற்றி முகடு வேய்ந்து
சதுரமிட்டு ஆவரணமும் செய்து சதுமுகத்தவன்
வியந்திட அமைத்த
செம்பொற் பெருங்கோயில் வளரும் ஆவுடை அம்மை
செவ்வாயின் முத்தம் அருளே!
சேம நிதியாய் அடியர் காமியம் அளித்த சிவை
செவ்வாயின் முத்தம் அருளே! 47
வாள் தடங்கண்ணினார் மஞ்சனச் சாலையினில்
ஆடிய நல்வாச நீரும்
வாவி விண்பாய் திறல் வயப்பரியின் வாயினின்
வழிந்திடு விலாழி நீரும்
கோட்டு மா இருகவுள் கைகோச மூன்றினும்
கொட்டு மத நீரு(ம்) மறைநூல்
கூர்ந்து உணரும் விப்பிரர் கை கொடுத்த நிதியோடு உதவு
குளிர்நீரும் ஒன்றதாகி
ஓட்டறா வீதியினின் மன்னவர்கள் ஊர் இரத
உருளைகள் வழுக்க ரத்தின
ஒண்சிலை பதித்து ஏற்றி மேல்தடவு வளனினை
பலி உகந்து இருகண் இமையாத நீள்
சேட்ட வானவர் பார்த்து மகிழ்ராசை அன்னை நின்
செவ்வாயின் முத்தம் அருளே!
சேமநிதியாய் அடியர் காமியம் அளித்த சிவை
செவ்வாயின் முத்தம் அருளே! 48
கொங்கில் பொலிந்த நால்வகை வண்டு கூட்டுணும்
கொள்ளை மது ஊற்று மலரில்
குண்டல உடுக்குலம் தங்குலம் எனக் கூடு
கொம்பர் வீண் தோய் பொழிலினும்
மங்குல் குலங் கடல் புனல் உண்டு கருமேனி
வாய்ந்து கருவுற்று மேற்கின்
மன்னிய விலங்கலைப் பிரசவிக்கும் தலம்
எனக் கருதி வரும் வட்டையில்
துங்கப் பெருங்கயிலை என்ன வெண்சுதை தீற்று
சுவண மாளிகைகள் வரையாய்த்
தோற்ற மீது எறும் அக்கிரகத்தின் உச்சியில்
சுடர் மணியின் மீது வெள்ளைத்
திங்கள் தவழ்ந்து உலவு வரராசை அன்னை நின்
செவ்வாயின் முத்தம் அருளே!
சேமநிதியாய் அடியர் காமியம் அளித்த சிவை
செவ்வாயின் முத்தம் அருளே! 49
வான்தனை ஓட்டிய மாட(ம்) மிசைப் பொலி
வஞ்சமும் நஞ்சமும் வேல்
வாள் கயலைப் பொரு நீள்விழி மங்கையர்
வார்குழலில் பொலியும்
தேன்தனை நல்கிய பூமலரில் செறி
வாசனை தேர்ந்து விணில்
சென்று சுழன்றிடு வண்டினின் உற்றிடு
திவ்விய வாசனையைக்
கான்தரு கற்பக நீழலின் வைகிய
கன்னியர் இம்மணம் நாம்
கண்டதும் இன்று என விம்மிதமாய் மகிழ்
கவினுறு ராசையினில்
மூன்று அரண் அட்டவரோடு உறை அம்பிகை
முத்தம் அளித்து ஆருளே!
முல்லையை வென்ற நகைத் திருவாயினள்
பம கலப்பன் முத்தம் அளித்து அருளே! 50
ஆதவன் நம்மை ஓர்கண் என வைத்திடும்
ஐயன் ஓர் பாகமுறும்
அம்பொன் மலர்க்கொடி ஆவுடை அம்பிகை
அணிமலர் துற்றி அரி
சீத மதுத்துளி உண்டு சிறைப் பெடையோடு
இசை தேர்ந்து பயில்
சேகர மேல் பொலி கூழையை ஒப்பு எனவே
திரளும் இருளைக்
காதி மலைந்திடின் அருள் செய்வள் என்று
கவின் பெறு கோபுர மேல்
கருதி உறைந்திடுகின்றது போல்
வாக்கு கன செம்மணியின் கதிர்கள்
மோதிய ராசையில் வாழும் மடக்கொடி
முத்தம் அளித்து அருளே!
முல்லையை வென்ற நகைத் திருவாயினள்
முத்தம் அளித்து அருளே! 51
---------------------
6. வருகைப் பருவம்
தண்டும் வாளும் திகிரியும்
பத்மாசனத்தில் வளர் திருமகள் நுதற்கு நிகர்
பகர்கின்ற தனுவும் ஏந்தி
மணி ஒளியினால் அந்தகாரத்தை வீட்டுவன்
மாசுண உடற்புறத்தின்
மரகதக்கிரி எனக் கமலலோசனம் வளர்கின்ற
மால் புதல்வன் அறியாத்
தணியல் செறி கொன்றையும் தண்பிறையும்
அரவமும் தாழ நீ சடை விரித்துத்
தள்ளாடி உள்ளம் கசிந்து உருகி ஊடல்
தவிர் என்று சங்கரர் வணங்க
அணி முடிக்கு அணி எனக் கொண்ட திருவடி பெயர்த்து
அருள் புரிந்திட வருகவே!
அம்போதியைப் பருகு கும்போதயன் பரவும்
அம்மை கோமதி வருகவே! 52
நெஞ்சில் நுண் அறிவிலா ஒரு முனிவரன் சிவனை
நேசித்து நினை வழிபடா
நெட்டூரன் ஆனதை அறிந்து நீ தவசினால்
நிருமலன் ஓர் பாகம் எய்த
வஞ்ச மிகு சஞ்சரீகத்து உரு எடுத்து
வலப்பாகத்தையே துளைத்து
வலம் வரல் அறிந்து நம் சத்தி அம்சத்தை நீ
மாற்றுவாய் என அகற்றப்
பஞ்சவானனன் ஒருபதங் கூட நல்கி நம்
பன்னிதன் சத்தி அன்றிப்
பகர் செயல் நமக்கு ஒன்றும் இலை என அறிந்து
உனைப்பரவ அருள் செய்த பரையே!
அஞ்சம் நிகர் நடைதரும் கஞ்சமலர்
அடி வருந்தாமல் மெல்மெல வருகவே!
அம்போதியைப் பருகு கும்போதயன் பரவும்
அன்னை கோமதி வருகவே! 53
நாட்டின் நிலம் ஐந்தில் சிறந்த மருதப் பாவை
தன்னை நாற்கோட்டு வேழ
நாகநாதன் வதுவை ஆற்ற அமரர்கள் தச்சன்
நாட்டிய மணப்பந்தருக்கு
ஈட்டு கால் என வாழை தாழை கமுகு இனம் உலவ
ஈர்ங்கடலின் அமுது அருந்தி
இருள்மணி எனத் திகழும் மேகங்கள்
மேற்கட்டி என்ன மீதில் செறிதர
நீட்டு சிறை மாயூரம் நாடகக் கணிகையரின்
நிர்த்தமிட வண்டு பாட
நிறை வளம் செறி சோலை மருவு வரராசையினில்
நிமல சங்கரர் ஆடிய
ஆட்டமோடு எதிர்ஆட வேட்ட ஆனந்த
சிவகாமி அம்பிகை வருகவே!
அம்போதியைப் பருகு கும்போதையன் பரவும்
அன்னை கோமதி வருகவே! 54
மோதிப் பகட்டு வாளைக் குலம் தாவி
முதுபாளை விரி தாழை காய்த்த
முப்புடைக் கனி சிதறி மேற்சென்று கமுகினை கப்பகம்
முறிக்க அதில் மிடறு ஒடிந்து
சோதிக் கதிர்த் தரளம் உதிர் ஒளியை மதி
என்று சுருள் விரித்து ஆம்பல் அலரத்
தொக்கிறினும் மேலவர்கள் உதவிசெய்
தன்மையைத் தோற்று பொழிலிடை சிவந்த
தாதில் பொலிந்த மலர் மது ஒழுகி அம்புயத்
தண்தட(ம்) நிறைத்து வயலிற்
சாலியுங் கன்னலும் வானுற வளர்க்க வள
மேவு வரராசை தன்னில்
ஆதிப் பரஞ்சுடர் ஓர் பாகத்து மருவும்
ஆனந்த சிற்பரை வருகவே!
அம்போதியைப் பருகு கும்போதயன் பரவும்
பெயர் அன்னை கோமதி வருகவே! 55
வந்தியரும் நன்மகப்பேறு பெற வளை கூன்
மன்மத ஆதி ரதியாக
மானிலத்தவர் இகழ வரு சிந்து நல் உருவம்
வாய்க்க மதி இரவி கதிரும்
இந்த விதம் என்று அறிகிலாப் பிறவி அந்தகரும்
எழில் விழிப் பிரபை எய்த
இருமல் குட்டம் குன்மம் ஈழை காமாலை
தலைவலி இருகை கால் முடக்கு
முந்தை வினையான் மருந்தில் தீர்ந்திடாத நோய்
முதுபேய் தொடக்கு பித்தம்
உற்று நின் சந்நிதியின் முன் வந்தவர்க்கு
முன் வாராது நீக்கு முதலே!
அந்தியம் பிறை சூடு சிவசங்கரேசர் மகிழ்
அருமறைப் பொருள் வருகவே!
அம்போதியைப் பருகு கும்போதயன் பரவும்
அன்னை கோமதி வருகவே! 56
மோகத் துயரால் தந்தை முன் ஓர்
முனிவன் பன்னி தனைச் சேர்ந்து
அம்முனி சாபத்தால் மூன்று உலகும்
நகைக்க முகில் போல் நிறத்தனது
ஆகத்தலம் எலாம் யோனியாகக்
கண்டும் சீதை தனத்து
ஆசையாலே சயந்தன் தன்
அழகார் தெய்வ உரு மறைத்துக்
காகத்து உருவாய்க் குத்து வினை
கடிந்து திவ்விய வடிவம் நல்கும்
கமழ்பூ நாகசுனை படிந்தோர்
கவலை தீர்த்துக் கதிபெற செய்
மாகத்து அமுதே! புன்னைவன
வாழ்வே! வருக வருகவே!
மன்றல் கமழுமலர்க் குழல்
கோமதியே! வருக வருகவே! 57
திதிக்கும் அதிதிக்கும் மகவாம்
அசுரர் சுரரும் செங்கையினால்
திண் மந்திரத்தின் மதித் தறியில்
தீவாய் பாந்தள் சேர்த்து ஈர்த்து
மதிக்கும் திருப்பாற்கடல் அமுதை
வடித்துத் தெளித்த மதுர ரச
வண்மைத் தமிழ்நாட்டுக்கு அரசாம்
மலையத்துவசன் தரு மகவே!
உதிக்கும் கதிரால் வெம்பாலை
உடலக் கருக்கி நீறாக்கி
உண்ணீர் சுவற்றும் கடும் கோடைக்கு
ஆற்றாது உழன்று ஒண்கோட்டில் வரு
மதிக்கும் குளிர் செய் புன்னை வன
மணியே! வருக வருகவே!
மன்றல் கமழு மலர்க் குழல்
பக்கம் கோமதியே! வருக வருகவே! 58
பருவப் புயல் நேர் குழல் மடவார்
படை மா வன்னி பசுந்தென்றல்
பன்மா மணித் தேர் கொண்டு இந்தப்
பல்லாயிர அண்டத்தின் உள்ளோர்
வெருவப் பொரு பூங்கணை மதனை
விழி அங்கியினால் வெறுத்த நம்பர்
மேல் ஆசையினால் தவ வேடம்
இட்டு விண்ணோர் நகர் பரவும்
உருவக் காஞ்சி நகர்க் கம்பைக்குள்
நீ பூசை இயற்றிய நாள்
உள்ள விரகம் ஆற்றாமல்
ஓல நீரால் அச்சுறுத்தி
மருவச் செய்யு மாமாய
வடிவே! வருக வருகவே!
மன்றல் கமழு மலர்க் குழல்
கோமதியே! வருக வருகவே! 59
செயக் கான் முளைத்த செங்கமலம்
செவ்வல்லிகள் செந்நீல நிறை
தேனுண்டு உறங்கு வரிவண்டு
செந்நெற்கு இடையே முளைத்த களை
ஐக்கார் கூந்தல் மள்ளியர்கள்
அனம் போல் நடந்து கடியும் மலர்
அங்கைக் கணித்த கரும் பொற்காப்பு
ஆலித்திடும் வன்தொனிக்கு அஞ்சித்
தொக்கார் தடத்தும் சோலையினும்
குதித்து அங்கு அவர் தம் குரவையினைக்
கூடி இகழ்தல் போல வரி
பாடும் பணை சூழ் குல ராசை
மைக்கார் மிடற்றார் மணக்கோயில்
வளரும் அனமே வருகவே!
மன்றல் கமழு மலர்க் குழல்
கோமதியே வருக வருகவே! 60
தேனே வருக! சீராசைத்
திருவே வருக! திரிநேத்திர
சிவசங்கரருக்கு உவகை நல்கும்
செல்வக் கனியே வருக! விண்ணின்
ஆனே பரவத் தவம் புரியும்
அமுதே வருக! குமுதவாய்
அனமே வருக! வினை இருளை
அவிக்கும் கிரணக் கதிர் வருக!
பால்நேர் மொழிப் பார்வதி வருக!
பனி மாமலையின் சேய் வருக!
பன்னாகங்கள் இரண்டும் வழிபாடு
புரியும் புன்னை வன
மானே வருக! உயிர் அனைத்தும்
வளர்க்கும் அனையே வருகவே!
மன்றல் கமழு மலர்க் குழல்
கோமதியே வருக! வருகவே! 61
-------------------
7. அம்புலிப் பருவம்
பெறு குபேரன் சினேகப்
பெம்மான் தன் மனைவி வாட்கலை உடையை நீயும்
இவள் பெருமணிக் கலையை உடையாள்
நீர் உலவு பிள்ளை மதி ஆவை நீ இவள்
நிழலினோடு ஆடு பிள்ளை மதியாள்
நீள் பனிக்கிரணன் நீ இவளும் எந்நாளும் எழில்
நிகழ் பனிக்கிரியின் மகளாம்
பார்உலகில் இத்தன்மையால் இவளொடு ஒப்பு
என்று பகர்கின்ற சொல் விளங்கப்
பரிய மணியிட்டு இழைத்திடு கோபுரத்தின்
வழியாய்ப் படர்ந்து ஓடி வந்து இங்கு
ஆரும் அமுதத் துளி தழைத்த மொழி அன்னையோடு
அம்புலீ ஆடவாவே!
அரிஅரனும் ஒன்றாக வரு தவ(ம்) முயன்றவளோடு
அம்புலீ ஆடவாவே! 62
முன்னம் மலையத்துவச மன்னவன் ஒருமகவு
பெற்றிடு முயற்சியாக
முதுமறை விதித்தபடி புரி புத்திர காமேட்டி
தன்னின் முலை மூன்று காட்டிக்
கன்னி இவள் கனலின் இடை வந்து அவதரித்தனள்
கனற் கடவுள் மகவதாகக்
கதிர்மதிக் கடவுளே நீயும் உற்பத்தியாம்
காரணத் தொடர்பினாலே
உன்னை ஒரு துணை எனக் கொண்டு விளையாட வா
என்று உவகையோடு அழைத்தால்
உனக்கு இது கிடைத்திடும் பேறு அல்ல நீ செய்த
ஒண்தவப் பேறு அதாகும்
அன்னையாய் எவ்வுயிரையும் காக்கும் வல்லியோடு
அம்புலீ ஆடவாவே!
அரிஅரனும் ஒன்றாக வரு தவ(ம்) முயன்றவளோடு
அம்புலீ ஆடவாவே! 63
எல்லாக் கலைக்கும் இவள் எசமாட்டி நீயும்
ஈரெண் கலைக்கு உடையன் அதனில்
இன்று இற்று ஓர்கலையாய்க் குறைந்து ஈற்றிலே
இரவியோடு ஒன்றி உருவ நீத்தாய்
நல்லார்கள் ஆன மெய்யடியார்கள் இவள் சநிதி
நாடியே கூடி வாழ்ந்தார்
நாளு நீ மிருக சம்பந்தம் உற்றே இரவின்
நண்ண லால் தானவன் எனப்
பொல்லாத நிசிசரப் பேர் புனைந்தாய் உனை ஓர்
பொருளாக மனதில் எண்ணிப்
பொய்தற் சிசுக்களோடு விளையாடு
பேதை ஆதலில் வா எனப் புகன்றது
அல்லாது நீ இவட்கு ஒப்பாவையோ இவளோடு
அம்புலீ ஆடவாவே!
அரிஅரனும் ஒன்றாக வரு தவம் முயன்றவளோடு
அம்புலீ ஆடவாவே! 64
வெம்பணி வரக்கண்டு உள் அஞ்சுவாய் நீ இவள்
விரைத் திருமலர்ச் சரண் இணை
விரிமணிச் சூட்டின் மிசைகொண்டு பணி
இருவர்கள் விரும்பி அர்ச்சனை புரிகுவார்
செம்பினிடை உற்றிடு களங்கம் என உடலினில்
தீராக் களங்கம் உற்றாய்
தேவி இவள் சந்நிதியின் உற்றவர்கள் வல்வினைத்
தீக் களங்கம் தவிப்பள்
தம்பம் என நீ சார்ந்த வரை தாழ்வு பெற்றன
தவச் செல்வி இவள் பிறந்த
சைலம் சிரேட்டம் உடையது இதைக் குறியாது
தயவுடன் வா என்றனள்
அம்புவி புரந்த திருமால் சகோதரியுடன்
அம்புலீ ஆடவாவே!
அரிஅரனும் ஒன்றாக வரு தவ(ம்) முயன்றவளோடு
அம்புலீ ஆடவாவே.! 65
கான் மருவு மான்மறுவு முயன்மறுவும்
அபரபக்கத்தினில் கலைகள் தேய்ந்து
கதிரொளி குழைந்து முதிர் கிழவர் போலே
நரைக் காயத்திலே சிலை எனக்
கூன் மருவு குற்றமும் குரு மனைவியைச் சேர்ந்த
குற்றமும் மற்றை உள்ள
குற்றமும் கங்கை என நாக சுனைத் தீர்த்தம்
குடைந்து கொண்டலின் மீது போய்
வான் மருவு புன்னைவன நீழல் ஊற இவளை
வழிபடின் நொடியினில் போக்குவாள்
மதி எனப் பெயர் பெற்றும் மதியிலி எனச் சொல்ல
வாளாது இருந்து அலுத்தாய்
ஆன் மருவி வந்தனை செய் ஆவுடைப் பார்வதியொடு
அம்புலீ ஆடவாவே!
அரிஅரன் ஒன்றாக வருதவம் முயன்றவளோடு
அம்புலீ ஆடவாவே! 66
இமையவர்கள் உண் மருந்து ஒரு கற்ப காலம்
உடல் இற்றிடாதே இருக்க
ஏம உலகத்திடை வைக்கும் இவள் நல்கும்
மண் மருந்து ஏத்தும் இனிய அடியார்
தமை உடல் வருத்து பிணி யாவையும் தீர்த்து
உடல் தவிர்ந்(து) உயிர் தனித்த பொழுது
சாயுச்சிய முத்தியினில் நீங்காது வைக்கும்
இத்தன்மையை உணர்ந்து இருந்தும்
சுமையுடல் கயரோகமும் தீர்ந்து முத்தியில்
தொடராமல் வீணதாகச்
சுழல் காற்றினில் சருகு எனச் சுற்றி அலைவது என்
தூய நின் குல விளக்காம்
அமை பொரும் தோளியுடன் இமையின் விழியாய் கூடி
அம்புலீ ஆடவாவே!
அரிஅரனும் ஒன்றாக வரு தவ(ம்) முயன்றவளோடு
அம்புலீ ஆடவாவே! 67
வரராசை சீராசை பூகயிலை புன்னை
வனமாம் இம் மகாதலத்தில்
மன்னு நின் குல உக்கிர வழுதியும் பொன்னியாம்
வரநதிக்கு இறைவனான
சிர நாமம் உற்றவனும் வனசரனும் மணிமுடிச்
செங்கண் கொடும் பாந்தளில்
சேடன் என அறிவுற்ற சங்க பத்மர்களும்
செயற்கரிய தவசு செய்து
பரமான முத்தி பெற்று உய்ந்தனர்கள் உனை வலிய
வா என்று பரிவு செய்யில்
பாலினில் பழம் நழுவி வீழ்தல் ஆகும் நின்
பாக்கியமதே பாக்கியம்
அரனாரோடு எதிராடி விளையாடும் அம்மையோடு
அம்புலீ ஆடவாவே!
அரிஅரனும் ஒன்றாக வரு தவ(ம்) முயன்றவளொடு
அம்புலீ ஆடவாவே! 68
கங்கை அணி கடவுள் தன் கைமானும் இவள்
இணைக்கண் மானும் நின் மானும்
எக்காலும் கலந்து உறவதாகும் இவள் முகமதிக்
கதிரினில் நிறைவு பெற்றுத்
துங்க மதி ஆகுவாய் அரன் அரியும் ஓர் உருத்
தோற்றமாய் உறைதலாலே
சொன்ன மகமேரு நிகர் கருடனும் இத்தலத்து
உறைகுவான் அவன் இடத்தில்
வெங்கொடும் பாந்தள் உன் மீது வாராது விடம்
மீட்கு மந்திரம் அறிகுவாய்
வேனில் கொடும் கோடை நீக்கவும் புன்னை வன
மென்னிழலும் உண்டு கண்டாய்
அங்கை அயில் வைத்த குகனைப் பெற்ற அன்னையுடன்
அம்புலீ ஆடவாவே!
அரிஅரனும் ஒன்றாக வரு தவ(ம்) முயன்றவளொடு
அம்புலீ ஆடவாவே! 69
பிரமன் தன் வாகன உருக்கொண்டு விண்ணில்
பெருங்காலமாய்ப் பறந்து
பேணும் இறகு எல்லாம் உதிர்ந்திடத் தேடியும்
காணாத பிஞ்ஞகன் தன்
சிரம் அன்ன வைத்த நட்பு அறியாது நிந்தனை செய்
சிறுவிதி மகத்தில் நீயும்
தேவரோடு கூடி அவி உண எண்ணியே சென்ற
தீய குற்றத்தினாலே
பரமன் வடிவாம் வீரபத்திரன் தாளால்
பதைத்திட உதைத்தது அறிவாய்
பனி வரைக் குமரி இவள் வா எனில் வராது
இருக்கில் பகவர் என் செய்கிலார்
அரம் அன்ன கூர்விழிச் சீராசை அம்மையுடன்
அம்புலீ ஆடவாவே!
அரிஅரனும் ஒன்றாக வரு தவ(ம்) முயன்றவளொடு
அம்புலீ ஆடவாவே! 70
எவ்வெவ் அண்டத்திலும் உள்ள அரி பிரமாதி
யாவரும் இவள் கடைக்கண்
இனிய அருள் எப்பொழுது கிட்டும் என வந்து நின்று
ஏத்தி எதிர் நோக்கி நிற்பார்
மௌவல் அங்குழலி இவள் வா என அழைத்திடு முன்
வாராது இருக்கில் உன்னை
வவ்வு பணி விட்டிடுதல் போலாது உன் உயிர்
கவரும் வன்பணி இரண்டு இங்கு உள
ஒவ்வொரு நொடிக்குள் அங்குற்ற உடல் சவட்டும்
இஃது உண்மை சொன்னேன் ஓடி வந்து
உள்ளம் களித்திடச் செய்தி எனில் நின்
உயிர்க்கு உறுதி உண்டு உலகத்தினில்
அவ்வவர் உயிர்க்கு உயிரதாய்க் காக்கும் அன்னையோடு
அம்புலீ ஆடவாவே!
அரிஅரனும் ஒன்றாக வரு தவ(ம்) முயன்றவளோடு
அம்புலீ ஆடவாவே! 71
---------------------
8. அம்மானைப் பருவம்
செழுமணியின் முத்தம்மனை
சேண் இடை எறிந்திடத் திங்கள் மண்டல வரைச்
சென்ற மதி தன்னை நோக்கி
எங்கள் நாயகி திருமுகத்து எழிலை வவ்வி நீ
இங்கு வான் இடை வதிந்தாய்
என்று உடலை எற்றிப் புடைத்துத் திரும்பி வந்து
எழில் தரு மலர்க்கரத்தில்
தங்கிய அனக்குஞ்சினைப் பொரு வியப்பினைத்
தந்து மன மகிழ்வித்திடத்
தண்சினை விரிந்த புன்னாக வன நீழலில்
சங்க பத்மர்கள் இறைஞ்சும்
அங்கயிலை அண்ணல்பால் இங்கிதமோடு ஆடுகொடி
அம்மானை ஆடி அருளே!
அங்கராகக் கொங்கை மங்கை கோமதியம்மை
அம்மானை ஆடி அருளே! 72
மாணிக்க முத்து இழைத்திட்ட அம்மனைகள் இரு
வனசக் கரத்தின் ஏந்தி
வான் நோக்கி வீச மேற்சென்று கீழ் வருதல்
மதி கதிர் இருவர் வந்து நின்முன்
பேணிப் பணிந்து வரம் வேண்டுதற்காக வரு
பெற்றிது எனத் துலங்கப்
பெருகு சுர கங்கை அலம் வர எம்பிரான் மகிழ்
பிறங்கச் சிரம் துளக்கப்
பாணிற்கு இசைந்த இசை பயில்கின்ற சகி மாதர்
பக்கத்தில் நின்று நின்கண்
பார்வை மேல் நோக்கம் வைத்து இமையாது நின்று
அர மடந்தையர்கள் பார்வை காட்ட
ஆணில் சிறந்த மதனுக்கு உரிமை மாமி உமை
அம்மானை ஆடி அருளே!
அங்கராகக் கொங்கை மங்கை கோமதியம்மை
அம்மானை ஆடி அருளே! 73
பண்டை மாதவர் இருவர் பண்ணிய தவத்தினால்
பைம்பொன் அம்பல நடுவினில்
பதும வேதாத் தந்தை முழவ ஒலி செய்ய
வானவர் முனிவர் பரவி ஏத்த
தொண்டர் அரகர ஒலி திகாந்த வரை முட்டி
அண்டச் சுவர் துளைத்து உருவிடத்
தூய ஆனந்த நறவு ஒழுகு பங்கேருகத்
துணை அடியின் ஒன்று பேர்த்துந்
திண்திறல் படைத்த முயலகன் வெரிந் குழிபடத்
திகழ் பரத முறையில் ஊன்றித்
திந்ததித் தாதொந்த தந்த என்றே
திருநடம் புரிந்து அருள் செய்திடும்
அண்டர் நாயகனுடன் ஆடிய பராசத்தி
அம்மானை ஆடி அருளே!
அங்கராகக் கொங்கை மங்கை கோமதியம்மை
அம்மானை ஆடி அருளே! 74
செம்மா மலர்ப் பாவை வெண்மா மலர்ப் பாவை
சேடியர்கள் ஆக நின்று
செம்மணியின் அம்மனையும் வெண்மணியின் அம்மனையும்
ஏந்தி எதிர் திகழ வீச
எம்மா மகத்துவ அறங்களும் புரி கையால்
இருண்மணியின் அம்மனையை நீ
ஏந்தி எதிர் தர மூன்றும் ஒக்கக் கலந்து வான்
மிசை ஏறல் இரவி மதியு(ம்)
கைம்மாலை ஒத்த வடிவுற்ற ஆதித்தன் அருள்
மைந்தனும் கூடி விண்ணின்
வாவுதல் எனக் கதிரு(ம்) மதியும் இரவொடு
நண்பு வாய்ந்தது எனவே சிறக்க
அம் ஆனை ஊர்ந்து செம்மானை வைத்தவர் தேவி
அம்மானை ஆடி அருளே!
அங்கராகக் கொங்கை மங்கை கோமதியம்மை
அம்மானை ஆடி அருளே! 75
செல்லார் குழல் செருக்கு அசைய அதன் மேல் அணி
செழும் பிறைப் பணி கருமுகில்
சேர்ந்த பிறை போல் தவழ இருதனச் சுமையினால்
சேன் இடைக் கமலம் என்ன
இல்லாத சிற்றிடையு(ம்) நைந்திடைப் பார
முலையினின் இட்ட ஆரம் அசைய
இரு கரத்து இட்ட நவமணி வளைகள் கலகலென
இம்பர் முதலா எழுந்த
பல்லாயிரம் கோடி அண்டமும் கற்பித்த
பானல் விழி இமையாது விண்
பண்ணவர்கள் உண்ண அமுதம் கொடுத்துக் காளம்
உண்ட பரிசு அறிய வைத்த
அல்லார் களத்தன் ஒரு பாகத்தின் மேவு மயில்
அம்மானை ஆடி அருளே!
அங்கராகக் கொங்கை மங்கை கோமதியம்மை
அம்மானை ஆடி அருளே! 76
வம்பிற்கு இசைந்த தன நிகர் அற்ற விரிதலைத் தரும்
தாழையும் மாவிலங்கும்
மாதுளையும் வில்வமும் கோங்கமும் புன்னையும்
வண்தழைகள் பொதுளும் விளவும்
பம்புற்ற சம்பீரமும் செறியும் உய்யான
நடுவினில் பாவை அன்னார்
பதுமக் கரத்திடை எடுத்து உதவு பன்மணியின்
அம்மனைகள் பற்றி நீயும்
வெம்பிச் சினந்து மேல் வீசல் அக்கனிகள் தமை
வீட்டுவாய் என்று எறிதல் போல்
விண்ணுளோர் மண்ணுளோர் யாவரும் வியந்திட
விறல் புரம் எரிக்க எந்தும்
அம்பொன் சிலைக் கையரோடு ஆடு அம்மை
அம்மானை ஆடி அருளே!
அங்கராகக் கொங்கை மங்கை கோமதியம்மை
அம்மானை ஆடி அருளே! 77
பற்பகல் இழைத்த புண்ணிய பலத்தால்
சங்க பத்மர்களும் அரனும் அரியும்
படிவம் ஒன்றாய்க் கண்டு தெரிசிக்க வரம் நல்கு
வரராசையில் பண்ணவர்
சிற்பர்களும் அதிசயித்திட அமைத்திட்ட திரு
ஆலயத்து இனிது இருந்து
தேவர் முப்பத்து முக்கோடியும் முனிவர் சித்து
ஆதியரும் வந்து போற்ற
முற்பவமும் இப்பவமும் முற்று வினை நீக்கி வரு
பவமுறாதே முடுக்கி
முளரியம் சேவடிப் பேறு அருளும் அரனார்
ஓர் பாகமும் கவர முன்னி
அற்பகலும் இடைவிடாதே தழுவும் அம்மை நீ
அம்மானை ஆடி அருளே!
அங்கராகங் கொங்கை மங்கை கோமதியம்மை
அம்மானை ஆடி அருளே! 78
காலை இரவிக்கு நிகர் செம்பொனால் செய்து
கவின் மணிகள் ஒன்பதும் அழுத்திக்
ககன முடியைத் தடவு கோபுரமும் அண்டப்
புறச்சுவர் எனக் கதித்த
நாலுபாலும் சூழ்ந்த திருமதிலும் நந்தி பின்
நாட்டிய துவசத் தம்பமும்
நால்வருக்கு அருள் செய்த இருமறைத் திருவாயர்
நடனமிடு நாத சபையும்
வேலை வாளைப் பொருத விழி உருத்திர கணிகை
மின்னார்கள் பரத முறையாய்
மிளிர் கொடி எனத் துவண்டு ஆடும் மண்டபமும்
இம் மேதினியினில் கயிலை நேர்
ஆலயந் திகழும் வரராசை அம்பிகை தேவி
அம்மானை ஆடி அருளே!
அங்கராகக் கொங்கை மங்கை கோமதியம்மை
அம்மானை அடி அருளே! 79
காராம் எனக் கருங் கூந்தலை நினைத்துக்
களிப்பினொடு சிறை விரித்துக்
கால் பெயர்த்து ஆடிவரும் மாயூரம் நின் இயல்
கண்டு கவின் முகம் வாடலால்
பேரானது உலகினில் பிணிமுகம் எனப் பெறப்
பெற்ற தாய்க்கு உறவிலாத
பிள்ளையாம் கோரகை நின் இசை அமுதினைப் பெரிது
உவந்து பேதுற்று வெள்கு
நீரால் அதற்கு நாமம் காளகண்டம் என
நிகழ்வுறச் செய்து தென்றல்
நேயமாம் சிறுகுழவி போல் உலவு பூந்தரு
நிறைந்தது தேன் முகை பிலிற்றும்
ஆராம மீதின் மலர் அம்புயக் கையினால்
அம்மானை ஆடி அருளே!
அங்காரகக் கொங்கை மங்கை கோமதியம்மை
அம்மானை அடி அருளே! 80
சந்தனத் தொயில் எழுது தடமுலைக் கொடி இடைச்
சலச வதனத்து மின்னார்
தமனியப் பாவை என ஆடரங்கத்தின் இடை
சதி முறையினால் நடிப்பத்
தொந்தொம் எனும் முழவு ஒலியோடு ஒத்த தாளத்து
ஒலி துணைச்செவிக்கு அமுதம் ஊறத்
தொன்முறையில் வழுவாது தொழு குலத்தவர்
மறைகள் துகள் அறப் பயிலும் ஒலியும்
எந்தை சங்கரர் நந்தி மீதினில் உலாக் கொண்டு
எழுந்து வர இம்பர் உம்பர்
எவ்வடியரும் கூடி அரகர எனப் புகழும்
இவ்வொலியும் வாரி ஒலியாய்
அந்திபகல் நீங்காத வரராசை அம்மை நீ
அம்மானை அடி அருளே!
அங்கராகக் கொங்கை மங்கை கோமதியம்மை
அம்மானை ஆடி அருளே! 81
--------------------
9. நீராடற் பருவம்
வடகங்கை பரிசுத்தம் அடைய
வரிவிழிக் கடை அருளின் எள்ளளவு நல்கி
வெள்வாணியும் பரிதி முதல்வன்
தந்த சேயான காளிந்தியும் தங்கள்பால்
சார்ந்து தானம் புரிதரத்
தவம் உயற்றும் ஞானவானந்த வெள்ளமே!
சங்கரக் கடவுள் பாகம்
சொந்தமாகக் கொண்ட மரகதக் குயிலே!
துழாய்த் திருமுடித் துணைவர் தம்
துணைவியும் பாரதியும் இருபுறமும் கைலாகு
தர ஒரு சுடர்க் கொடி என
அந்தரத்தவர் ஆடு பொருநை நதி அமுத நீர்
அம்மை நீ ஆடி அருளே!
ஆதிரையினார் மருவு மாது கோமதி தேவி
அம்மை நீராடி அருளே! 82
பாசி கயல் வள்ளை செவ்வாம்பல் செங்கிடை
பதும முகை ஞெண்டு பாய்வரால் உள்
பற்றுற உறுப்பு அடக்கிய கமடமும்
பவள வண்கிளையும் அரி பரந்து
மூசு குழல் கண் காது வாய் அதரம்
முத்து அணி தனம் முழந்தாள் கணைக்கால்
மொய்ம்புறும் புறவடி செவ்விரல் அன்ன வென்று
முதிர் கவிவாணர் சொன்ன தன்மை
ஏசில் அது நம்மிடத்து உண்டோ எனச் சூழ
இகுளையர்கள் சிவிறி நிறைய
விட்ட குங்கும நீர் இறைக்க இருகரையு(ம்)
மற்றும் நவமணி கொழித்து எறியு(ம்) உம்பர்
ஆசில் அமுதப் பெருக்கு என்ன வரு பொருநை நீர்
அம்மை நீ ஆடி அருளே!
ஆதிரையினார் மருவு மாது கோமதி தேவி
அம்மை நீராடி அருளே! 83
கொண்டலை நிகர்த்த நின் கூந்தலின் இயற்கை
மணமோடு குற்றேவல் புரியும்
கோதையர்கள் பூசிய மயிற் சாந்து அகில்
தூமமும் கூடி ஓடுநீடு
தெண்திரைப் புலவு மாறித் தெய்வ வாசனை
திகாந்தம் வரை முட்ட வானில்
திங்கள் தவழ் பொதியாசலத்தில் நின்று
இவ்வுலகினில் செறிந்திடு மானிடர்
பண்டையில் செய்த பாவங்களை நிவர்த்தி
புரி பரம கங்கைக்கு நேராய்
பைங்கமுகு தாழை கழையின் தலை கவிழ்ந்திடப்
பரிதி கனல் மேனி குளிர
அண்ட மீதில் பரந்து எழு பொருநை நதி நனீர்
அம்மை நீ ஆடி அருளே!
ஆதிரையினார் மருவு மாது கோமதி தேவி
அம்மை நீராடி அருளே! 84
கச்சையும் கங்கணமும் மிளர்சடை கழுத்தணி
கலன்களும் காது கொடிய
கணமணிப் பஃறலைச் சேடன் குலத்தில்
வரு காகோதராக்களாக
இச்சையுடனே புனைந்து எரியின் இடை ஆடு
இடுகாட்டினில் பொடிகள் பூசி
இப உரி மெய் போர்த்து வண்புலி உரி அரைக்கு
அசைத்திட்டவர் சிரத்தின் நீரை
எச்சில் என்றே தள்ளி நினது தமிழ் நாட்டின்
உள யாவையும் பரிசுத்த மேல்
இட்டிடச் செய்து தெண்திரை உவரை மாற்றி
எவ்வுயிர்க்கும் உணவது ஆகி
அச்சுதமதாய் உலகை ரட்சனை செய் பொருநை நீர்
அம்மை நீ ஆடி அருளே!
ஆதிரையினார் மருவு மாது கோமதி தேவி
அம்மை நீராடி அருளே! 85
மதி மண்டலத்து வரை முட்டி மதி உடன் மருவு
மறுவைத் துடைத்து விண்ணின்
வாழ்கின்ற வாரணமும் இங்குள்ள வாரணமு(ம்)
மருவி விளையாடல் செய்யக்
கதி தங்கு கேசரியை ராசியில் கேசரி
கலந்து கொண்டு உறவு கொள்ளக்
ககன முடி மீது ஓங்கு பொதிய முடிமேல் நின்று
கதிர் அமரர் உலகின் உள்ள
சுதை வந்து வார்த்தது என ஒழுகு வெள்ளருவிகள்
தொடர்ந்து ஒரு முகம் கொண்டு கீழ்த்
தொல்நிலம் மீது அசுரர் மேதையாகிய துகள்
துடைத்து நல் சுத்தி செய்யும்
அதிர்கின்ற தாம்பிரவர்னிப் புதிய வெள்ள நீர்
அம்மை நீ ஆடி அருளே!
ஆதிரையினார் மருவு மாது கோமதி தேவி போல்
அம்மை நீராடி அருளே! 86
அங்கத்து உயிரைத் தழுவிய ஆணவச்
சேற்றினை மெய்யறிவு எனு நீர்
ஆடிக் களைந்து பரிசுத்தம் ஆக்கி
அழலில் காய்ச்சி ஒளி
பொங்கித் திகழும் தமனியம் போல்
பொலிய நினது திருவுருவில்
புந்தி செலுத்தும் அடியர் சென்மப்
புணரி நீக்கித் திருவருளாம்
வங்கத்து ஏற்று மலர் அடியை
வணங்க வரம் தந்திடும் மணியே!
வாலிதாம் நன்முத்தம் இருகரையும்
மலிய மகிழ்ந்து நல்கும்
சங்கத் திரள்சேர் கூழை நதிதனில்
நீராடி அருளுகவே!
சங்கரேசர் பாலுறை எம்தாய்
நீராடி அருளுகவே! 87
பனிதோய் முகில் வாரிதி நீரில் மயப்படும்
படிய நன்னீர் ஆகுதல் போல்
பணியா இரும்பு பரிசன வேதியினால்
பசும்பொன் ஆவது போல்
நனி நீ படியும் தன்மையினால் நாகர்
மனிதர் படியின் அவர்
நாள் நாளும் செய் தீ நீரை
நன்னீர் ஆக்கி இந்நிலத்தில்
இனி வந்து உதித்து மரியாமல்
இகமும் பரமும் விரும்பாமல்
என்றும் உளதாய் நித்தியமாய்
இலகு ஞானவானந்தத்
தனி வீடு அளிக்கும் நாக சுனைதனில்
நீராடி அருளுகவே!
சங்கரேசர் பாலுறை எம் தாய்
நீராடி அருளுகவே! 88
நினது கணவர் தலைமீதில்
நெடுநாள் இருந்த மாற்றாளாய்
நெஞ்சில் நினையாதே தோய வந்த
நேயம் அதனை உன்னி
வனச(ம்) நீலம் முதலான
மலரைத் திரைக் கையால் வாரி
வணங்கும் அடியார்க்கு அருள் உதவும்
மலர் மெல்லடியில் அருச்சித்துத்
துனையும் சங்கத் திரள் ஓசை துதிதாய்த்
துதித்துக் கங்கை மங்கை
தொண்டு புரிவான் கண்டு மகிழ்வாகித்
தூய உள்ளத்து இரங்கித்
தனமும் மணியும் தரும் கூழைதனில்
நீராடி அருளுகவே!
சங்கரேசர் பாலுறை எம்தாய்
நீராடி அருளுகவே! 89
முனமே கங்கைதனை முடிமேல்
முக்கண் நாதர் சுமந்த பகை
முற்றாது உளத்தில் கொண்டு ஊடல்
வைத்தாய் இன்று முளரி மலர்
அனைய திருச்செஞ் சேவடியால்
அவள்பால் நடந்து நீ தோயில்
அண்ணல் உடனே ஊடல் செய்தால்
அன்று நின் பாதோகம் என்று
இனைதல் இலாது ஆதரித்து எதிர் நின்று
எதிர் உத்தரமும் சொல்வார் என்று
ஏமாப்பு அடைந்து மனக் கலக்கம்
இன்று தவிர்வாள் இமையரசன்
தனையையே தண் கூழை நதிதனில்
நீராடி அருளுகவே!
சங்கரேசர் பாலுறை எம்தாய்
நீராடி அருளுகவே! 90
வானத்து உருமில் பிளிறு ஒலியும்
வளரு(ம்) தாலப் புழைக்கரத்து
வண்டு மூசும் இரு கவுளும்
வாக்கு மத ஆற்றின் ஒலியும்
மீனக் கடலின் ஒலி அடக்கும்
வேழக் குழாமும் கதிர்ப் புரவி
மேய நிறத்தைப் பசும்புல் என
விரும்பி விண்ணின் மேல் தாவச்
சேனைத் தலைவர் ஊர்ந்து வரும்
திரள் வெம்பரிகள் நிறை வீதி
சிறந்து தந்த நகரம் எனச்
செல்வம் மலியும் வரராசைத்
தானக் கிளியே! கூழை நதிதனில்
நீராடி அருளுகவே!
சங்கரேசர் பாலுறை எம்தாய்
நீராடி அருளுகவே! 91
---------------------
10. ஊசற்பருவம்
உபநிடத முடிவாம் பலகையில்
மூட்டிப் பொருத்தி அதன் நடுவிருந்து உனதருள்
சத்தி கணம் முன் உந்திட
இது அது எனும் சுட்டிலாத மெய்ஞ்ஞான
ஆகாய வரை ஏகி ஆடும்
எம்பிராட்டியாங்கள் பேதைமையினால்
செய்த இவ்வூசலின் மகிழ்ந்து
கதுவுறும் மனத்தினால் ஆடுவது தேவர்
அமுதோடு கண்ணப்பன் எச்சில்
கடவுள் நிகராய்க் கொள்ளின் நீ கொள்ளல்
நீயன்றோ கமழ் புனைச் சோலையில்
புது மது திரண்டு ஒழுகு கூழை நாயகி திருப்
பொன்னூசல் ஆடி அருளே!
பொற்றவர் தரித்தவரோடு உற்ற கோமதியம்மை
பொன்னூசல் ஆடி அருளே! 92
வேதன் நினது அருளினால் எண்பத்து நான்கு
இலக்கம் யோனி பேதமாக
விதவிதமாய்ச் சிருட்டித்த உயிர் செய்த
வினைவழி இகபரத்தினுக்கும்
பேதமுறு போகத்தை ஊட்டி வைத்துச்
சூத்திரதாரியாய் உடலின் நின்று
பேருலகர் அறியாமல் ஆட்டும் பராசத்தி
பெய்முகில்கள் தழை அரும்பும்
சூதவன மேல் வதிதல் நான்முகில் தரித்த வேணிக்
கடவுள் என்று துன்னும்
சுடர்மணி நிறத்த குயில் மாரனைப் பொரவா
எனத் தொனி புரிந்து அழைக்கும்
போது செறி சோலை சூழ் வரராசை அன்னை நீ
பொன்னூசல் ஆடி அருளே!
பொற்றவர் தரித்தவரோடு உற்ற கோமதியம்மை
பொன்னூசல் ஆடி அருளே! 93
கடையர் கடைசியர் முகம் கண் காது
வாயைக் கடுத்த கஞ்சமும் நீலமும்
கவின் வள்ளை அல்லியும் கடிதும் எனவே
கடாக் கட்டி உழும் அலமுகத்தில்
படையினால் வேர் அகழ்ந்து இன்னும் முளையா
வகை பரம்பு தடவிப் புதைத்துப்
பைங்கூழ் வளர்த்திடும் பணையினில் சங்கமம்
பரிந்து ஈன்ற முத்தம் வாரி
இடை ஒடிய இளமுலை தடித்து வளராப்
பேதை ஏழையர்கள் சிற்றிலாக்கும்
இனவாழை பூகம் பலாத் தென்னை மாத் தரு
விண் இரவிக்கு மேல் நிழல் அதாய்ப்
புடை மருவு வரராசை அம்பதியில் வாழ் அம்மை
பொன்னூசல் ஆடி அருளே!
பொற்றவர் தரித்தவரோடு உற்ற கோமதியம்மை
பொன்னூசல் ஆடி அருளே! 94
நினது செந்தாமரைத் தாள் இணை நிகர்த்த
மாணிக்க நிரையாய்க் குயிற்றி
நீள் ஒளி பரப்பு பலகையின் மீது உன்
நகை ஒத்த நித்திய வடம் புனைந்து
கனக வரை வில்லர் புயம் அனைய பவளம்
தாணு நாட்டி நின் காயம் ஒத்த
கதிர் மரகதத்தினின் இழைத்த உத்திர
மிசைக் கட்டி நின்மயமதாக
வனையும் இவ்வூசல் மதி மண்டலந் தொட்டாட
மகிழ்நர் உளம் ஊசலாட
மற்றுள சராசரத்து உயிர்களும் உவந்தாட
மாட முடிமேல் விண் மணியைப்
புனையும் வரராசை வரை ராசன் அருள் தேவி நீ
பொன்னூசல் ஆடி அருளே!
பொற்றவர் தரித்தவரோடு உற்ற கோமதியம்மை
பொன்னூசல் ஆடி அருளே! 95
களப முலை மாதரார் இகுளையருடன் காதலுறு
பொய்தலாட அவர் தம்
கமழ் அகிழ் தூமமும் விரைநறும் கோதையும்
அகலாத கரிய குழலை
இளநகையை அதரத்தை நீர் உண்டு எழுந்த
கார் இணர் முல்லை கோபம் என்ன
எழில் மஞ்ஞை சிறை விரித்து ஆடி
இளவேனிலைக் கார்காலம் என்ன எண்ணும்
வள மருவு சோலை செறி வரராசை அம்பதியில்
மனம் மொழி மெய் மூன்றும் ஒன்றி
வன்னியிடை மெழுகு என்ன உருகி உருகிப்
பழைய வழிஅடியர் அன்பு உகந்து
புளகிதமுறப் பரவு துளப முகில் சோதரீ
பொன்னூசல் ஆடி அருளே!
பொற்றவர் தரித்தவரோடு உற்ற கோமதியம்மை
பொன்னூசல் ஆடி அருளே! 96
வள்ளம் நிறை பாலமுது வெள்ளனம் கிள்ளைகட்கு
ஊட்டி மடமொழி பயிற்றும்
மயில் அன மடந்தையர்கள் உபரிகையில்
மீதுலவி வாதாயனத்து அருகினில்
வெள் ஒளி பரப்பிவரு பிள்ளையம் பிறையை
மிளிர் மென்கரத்தால் எடுத்து
வில் நுதலை ஒப்பு என்றும் நடுவில் களங்கம்
விரை கமழ் நான திலகம் என்றும்
எள்ளரிய கவிவாணர் உவமித்தல் சரி விண்ணில்
ஏகு என விடுத்து மகிழும்
இன மணி இழைத்த மாளிகையும் உபவனமீது
இருந்து நறை உண்டு பாடும்
புள் ஒலியும் மருவு பூகயிலாய நாயகீ
பொன்னூசல் ஆடி அருளே
பொற்றவர் தரித்தவரோடுற்ற கோமதியம்மை
பொன்னூசல் ஆடி அருளே! 97
நன்னிலமகட்கு முகம் அன்ன செந்தாமரை
அலர்ந்த பணையூடு எழுந்த
நறிய செஞ்சாலிகள் விளைந்த கதிர் ஊடு
மேதித் திரள் நடந்து உழக்கித்
துன்னு கதிர் மேய்ந்து கன்னல் படப்பையினில்
தொடக்கு வேலியை முறித்துச்
சூழல் உட்சென்று கடைவாய் குதட்டிய
போது சுடர்முத்து உதிர்ந்து மலிய
மன்னும் அக்கன்னலை முறித்து அருந்திச்
சில வன்மேதிகள் வயற்குள் ஏகி
வண்முத்தம் வாயினில் உதிர்த்திடக் கண்டு
இடம் மாறி வரு முத்த(ம்) நோக்கிப்
பொன்னுலவு மள்ளர்கள் வியக்கும் வரராசை உமை
பொன்னூசல் ஆடி அருளே!
பொற்றவர் தரித்தவரோடுற்ற கோமதியம்மை
மானியம் பொன்னூசல் ஆடி அருளே! 98
வாதிட்ட சமணர்களை வையை நதி நீரிலும்
வன்னியிலும் எழுதியிட்ட
வண்தமிழ்த் தேவாரமான கவியால் வெல்ல
மாமணி இழைத்த கிண்ணம்
மீதிட்ட பொற்றனத்து அமுது அருந்திக்
கௌணியக் குலத்தினில் உதித்த
மெய்ஞ்ஞான சம்பந்தரைக் குகனை வேழமுகனைப்
போல் வளர்த்த மின்னே!
ஏதிட்டமான பொருள் என்று பழவடியருக்கு
எண்ணுமுன் அளிக்கும் நிமலீ!
இகபரத்தாசையை இகந்த பொதியத்தவன்
எழுந்தமதி தோறும் வந்து
போது இட்டு அருச்சனை செய் வரராசை அன்னை நீ
பொன்னூசல் ஆடி அருளே!
பொற்றவர் தரித்தவரோடுற்ற கோமதியம்மை
பொன்னூசல் ஆடி அருளே! 99
சேணில் பொலிந்த மதி கதிர்இரவி நாட்குலம்
செம்பொன் மகமேரு என்னத்
தேர்ந்து உலவ இரணியத்தால் திருந்திய
தகடு சேர்த்து வேய்ந்திட்ட மாடத்
தூணில் பொலிந்த தோகையர்கள் சித்திர நிரை
துணைக்கண் இமையாது சூடும்
தொடையல் வாடாதவை அறிந்து தம் இன
மாதராம் எனச் சுவண உலக
மாணுற்ற மடவியர்கள் வந்து பார்த்து இம்பரின்
வதிந்த தபதியர்கள் கையின்
மாட்சிமையை அதிசயிக்கும் தெய்வ வரராசை
மாநகர் புரந்த மயிலே!
பூணில் பொலிந்த தன ஆவுடைக் குமரி நீ
பொன்னூசல் ஆடி அருளே!
பொற்றவர் தரித்தவரோடுற்ற கோமதியம்மை
பொன்னூசல் ஆடி அருளே! 100
தாரணி கருங்குழலும் ஈரெண் கலாநிதிதனில்
திகழும் எழில் வதனமும்
தனுவை நிகர் நுதலும் இருகாதில் அடியார்
குறைதனைத் தவிர்த்து ஆடி என்ன
ஈரமொடு அடிக்கடி உரைத்திடச் செல்வது என
ஏகும் இரு கருணை விழியும்
எம்பிரான் உள்ளத்தினில் இனிது உவப்புற மலரும்
இணர் முல்லை அனைய நகையும்
வாரணி திருத்தனமும் மணிஅணி நிரைத்த
காஞ்சிக்கு இசையும் வல்லி இடையும்
வனசமலரை பொருத திருவடியு(ம்) மரகதத்
திருமேனியும் மலிந்த
பூரண சௌந்தரீ வரராசை அன்னை நீ
பொன்னூசல் ஆடி அருளே!
பொற்றவர் தரித்தவரோடுற்ற கோமதியம்மை
பொன்னூசல் ஆடி அருளே! 101
-----------xxxx----------
This file was last updated on 2 July 2020.
Feel free to send the corrections to the Webmaster.